சென்னை, செப். 2- மத நல்லிணக்கத்தால் மட்டும்தான் இந்தியா வெற்றிபெற முடியும், மதங்களால் வெற்றிபெற முடியாது என கவிஞர் வைர முத்து கூறினார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மத நல்லிணக்க மாநில மாநாடு சென்னை காம ராஜர் அரங்கில் ஞாயிறன்று (செப். 1) முது முனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் தலைமையில் நடைபெற்றது. க.உதயகுமார் வரவேற்றார். இதில் கலந்து கொண்டு கவிஞர் வைர முத்து பேசுகையில், மதநல்லிணக்கத்தை வலி யுறுத்த வேண்டும் என்று வாதாடுவதே, மத நல்லிணக்கத்தோடு வாழ் என்று ஆணை யிடுவதே நம்முடைய நாகரீகத்திற்கு விரோதம். மத நல்லிணக்கம்தான் இந்த மண்ணின் இயல்பு. மத நல்லிணக்கம்தான் மனித நாகரீ கம், வாழ்க்கை முறை. ஆனால் மத நல்லி ணக்கம் என்ற ஒரு கருத்தியலை வலியுறுத்தி நாம் இங்கு கொண்டாடுவதும், கூட்டம்போடு வதும், கோஷமிடுவதும், தீர்மானம் நிறை வேற்றுவதும் நம்முடைய நாகரீகத்தில் கறை படிந்திருக்கிறது என்று அர்த்தம்.
மதநல்லிணக்கத்தை வலியுறுத்தவேண்டிய நிலை
இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிற வர்களை, இங்கு கருத்துரையாற்ற வந்திருக்கி றவர்களை நான் வணங்குகிறேன். இந்த நாட்டைப் பற்றி, மனிதர்களைப் பற்றி கவலைப் படுகிறீர்கள். இந்த மனித சமூகம் வெல்ல வேண்டும் என்று துடிக்கிறீர்கள். மத நல்லிக் கணத்தை தோள்களிலும், கண்களிலும், நெஞ்சி லும் சுமந்து கொண்டிருக்கிற உங்களை யெல்லாம் நான் வாழ்த்துகிறேன். மதநல்லி ணக்கத்தை வலியுறுத்த வேண்டிய நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டிருக்கிறதே என்று வருத்தப்படுகிறேன்.
தேசிய கொடியின் வண்ணங்கள் எதை உணர்த்துகிறது
நீங்கள் நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்கேற்றவர்கள் எப்படியெல்லாம் சிந்திக்கி றார்கள் தெரியுமா? இவர்கள்தான் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள். ஒரு பள்ளியில் மாணவன் ஒருவன் பேசவந்தான். அவன் தலையில் எண்ணெய் இல்லை. அவன் உடை யில் ஒரு நேர்த்தியில்லை. அவன் உடலில் உறுதியில்லை. ஆனால் சொல்லில் வலு விருந்தது. கண்களில் ஒளி இருந்தது. அவன் தேசியக் கொடிக்கு என்ன பொருள் என்று தெரியுமா எனக் கேட்டான். தேசியக் கொடியை எந்த பொருளில் வடிவமைத்தார்கள் என்றெல்லாம் இப்போதுள்ள மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. மேலே உள்ள காவி நிறம் இந்துக்களின் குறியீடு. நடுவில் உள்ள வெண்மை நிறம் கிறித்துவத்தின் குறியீடு. கீழே உள்ள பச்சை நிறம் இஸ்லாத்தின் குறி யீடு. இந்த 3 மதங்களும் நல்லிணக்கத்தோடு திகழ வேண்டும் என்றுதான் பாரதக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது என்றான். அந்த ஒரு பள்ளி மாணவன் கூறியதை இந்த பாரதம் புரிந்து கொண்டிருந்தால் இந்த பிரச்சனைக்கு இடமில்லை, பேதங்களுக்கு இடமில்லை.
நாகூர் தர்காவிற்கு சென்றால் இந்துக்கள் முடி இறக்குகிறார்கள். வேளாங்கண்ணிக்கு சென்றால் இந்துக்கள் நேர்த்திக் கடன் செலுத்து கிறார்கள். தஞ்சை மாரியம்மன் கோயிலுக்குச் சென்றால் இஸ்லாமிய சகோதரர்கள் காணிக்கை செலுத்துகிறார்கள். இந்த நல்லி ணக்கம் என்பது மதம் சொல்லி வந்ததல்ல. அரசியல் சொல்லி வந்ததல்ல. இனம் சொல்லி வந்ததல்ல. வேறு யார் சொல்லியும் வந்ததல்ல, எங்கள் மனித உறவு இயல்பாக கற்பித்துக் கொண்டதுதான் இந்த மத நல்லிணக்கம். ஆன் மிகம் எங்களை ஒன்று சேர்க்க பார்க்கிறது. அரசி யல் எங்களை பிரிக்கப் பார்க்கிறது என்றார்.
மதநல்லிணக்கம் என்றால் என்ன?
மத நல்லிணக்கம் என்பது என்ன தெரி யுமா? சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகங்களின் நெருப்பில்தான் சகோத ரத்துவம் பூக்கிறது. எல்லா மதங்களும் தியா கத்தை வலியுறுத்துகின்றன. எல்லா மதங்க ளும் இன்னொரு உயிரை தன்னுடைய உயி ராக நேசி என சொல்லிக்கொடுக்கின்றன. மனி தர்கள்தான் தங்கள் சுயநலத்திற்காக மனி தர்களை பிரிக்கிறார்கள். உலகத்தில் முதலில் பிறந்த குழந்தையின் தாய்க்கு பிரசவம் பார்த்தது யார் என்ற கேள்விக்கு பதில் இல்லை. இந்த உலகத்தை படைத்த கடவுள் தாந்தோன்றி என்றால், இந்த உலகமே தாந்தோன்றியாக ஏன் இருந்திருக்கக் கூடாது என்ற இங்கர்சாலின் கேள்விக்கு பதில் இல்லை. ராமன் ஒரு வழிப் பாட்டுத் தலத்தை கைப்பற்றச் சொல்லுவாரா அல்லது அதை அகற்றச் சொல்வாரா? அவன் யார். நீ ஈரேழு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும். உன்நாட்டை பரதன் ஆள வேண்டும் என்று கூறியவுடன், உடனடியாக தேசத்தை துறந்த ராமனா ஒரு மத வழிப்பாட்டுத் தலத்தை கைப்பற்றச் சொல்லுவார். மனிதன் அச்சப்பட்ட போது கடவுள் பிறந்தது. அரசு அச்சப்பட்ட போது மதம் பிறந்தது. கடவுள் மனி தனால் உண்டாக்கப்பட்டவன். கடவுள் என்ற ஒன்று இல்லையென்றால் மனிதகுலம் அதை கண்டு பிடித்து கொண்டாடும் என்று சொன்னான் சாணக்கியன். மார்க்ஸ் சொன்னான் நிகழ்காலத்தில் இந்த வையத்தில் வாழும் தருணத்தில் இந்த பூமியில் சொர்க்கம் படைக்கப்படவில்லையென்றால் மனிதன் தனக்கான சொர்க்கத்தை கற்பித்துக் கொள்வான் என்றார்.
இந்தியர்கள் காக்கப்படவேண்டும்
சிறுபான்மையை பார்த்து பெரும்பான்மை அஞ்ச வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் இந்துக்களை காக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய வேட்கையோ அதே போல் இந்தியர்கள் காக்கப்பட வேண்டும் என்பதும் மிகப்பெரிய தத்துவம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உடல் மீது உடல் திணிக்கப்படுவதும், மொழி மீது மொழி திணிக் கப்படுவதும், மதத்தின் மீது மதம் திணிக் கப்படுவதும்தான் உலகத்திலேயே ஆகச்சிறந்த வன்முறை. மத நல்லிணக்கத்தால் மட்டும்தான் இந்தியா வெற்றிபெற முடியும், மதங்களால் வெற்றிபெற முடியாது என்பதை இந்த உலகிற்கு உரக்கச் சொல்லுவோம். நிலாவில் இந்தியா இறங்கியிருக்கிறது. இந்தி யன் பாலைவனத்தில் இறங்கிவிட வேண்டாம். இவ்வாறு வைரமுத்து பேசினார். மத நல்லிணக்க மாநில மாநாட்டை யொட்டி நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கவிஞர் வைர முத்து நினைவு பரிசையும் சான்றிதழையும் வழங்கி பாராட்டினார். அப்துல்சமது, பிஷப் தேவசகாயம், இரா.தெ.முத்து, ஜெ. ஹாஜாகனி, டாக்டர்கள் சொக்கலிங்கம், சுப்பையா, முத்துக்குமார சாமி, உமாமகேஸ்வரி, பக்ருதீன், குமரி ஆனந் தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தாவூத் மியாகான் நன்றி கூறினார். நிகழ்ச்சியை அருணன், எம்.ராமகிருஷ்ணன், ஜி.செல்வா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
தமிழக மக்களின் ஒற்றுமையை சிதைக்கமுடியாது : பர்வீன் சுல்தானா
பர்வின் சுல்தானா பேசுகையில், ஒரு மாணவி என்னிடம் வந்து நான் கெட்டவளாக மாறப் போகிறேன் என்றார். ஏன் என்று கேட்டதற்கு என்னுடன் பயிலும் சக மாணவி கெட்ட வள். ஆனால் அவள் அனைத் திலும் வெற்றி பெறுகிறாள். தேர்வு முடிவு வருவதற் குள்ளாகவே வேலைக்கும் சென்று விட்டாள். ஆனால் நான் நல்லவள் ஆனால் எதிலும் வெற்றிபெற முடியவில்லை. எனவே கெட்டவளாக மாறப் போகி றேன் என்றாள். அந்த மாணவிடம் நான் கூறினேன் அவள் தீமையில் காட்டிய தீவி ரத்தை நீ நன்மையில் காட்டவில்லை என்று. நாம் நன்மையை முன்னெடுப்ப தற்காக இங்கு கூடியிருக்கிறோம். தீவிரத் தன்மையை நாம் ஆழமாக முன்னெடுக் கிற போது வெற்றி நிச்சயம் என்றார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மிகப்பெரிய கலவரம் மீர்சாகிப் பேட்டையில் ஏற்பட்டது. ஆனால் அங்கு வசிப்பவர்கள் அந்த கலவரத்தை முன்னெ டுக்கவில்லை. வெளியில் இருந்து வந்தவர்கள்தான் முன்னெடுத்தார்கள். பிரிவினை என்று ஆங்கிலேயர் துப்பி விட்டுச் சென்ற எச்சிலின் ஈரம் இன்னும் இந்தியாவில் காயவில்லை. இன்னும் ஆயிரம் ஊர்வலங்கள் இங்கு நடை பெற்றாலும் கலவரக்காரர்களை வெளி யில் இருந்துதான் கொண்டுவர வேண்ண டுமே தவிர அங்கு வாழக் கூடிய மக்கள் மத நல்லிணக்கத்தோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பூமியில் எவ்வளதுதான் நீங்கள் கலவர எண் ணங்களை விதைத்தாலும், தமிழகத்தில் நீங்கள் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாது என்றும் அவர் கூறினார். மனித நல்லிணக்கம் என்பது வாழ்வி யல். திருமணம், உணவு, கடவுள் வழிபாடு இந்த மூன்றிலும் யாரும் தலையிடக் கூடாது. சாதி, மதம் பார்க்காமல் இறந்த வர்களின் உடல்களை தூக்கிச் சென்ற பூமி இது. இப்போது பள்ளிக்கூடங்களை மூடத் தொடங்கியுள்ளனர். இந்திய புவி பரப்பிலேயே இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் பள்ளிக் கூடங்கள் அதிகம் உள்ளன. அதனால்தான் தமிழன் சிந்திக்கிறான். அதனால்தான் தமிழகத்தில் அவர்களால் இங்கு வெற்றிபெற முடிய வில்லை. எனவேதான் நம் சிந்தனையை நிறுத்துவ தற்காக பள்ளிக் கூடங்களை மூடி வருகிறார்கள். நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர் கூட எழுதக் கூடாது, பேசக் கூடாது என்று கூறினானே தவிர யாரும் படிக்கக் கூடாது என்று கூறவில்லை. ஆனால் இப்போது ஆள்பவர்கள் நம்மை படிக்கக் கூடாது என்கிறார்கள். எந்த மதமும் பிற மத நூல்களை பயி லக் கூடாது எனக் கூறவில்லை. நாத்தி கர்கள் அதிகம் உள்ள நார்வேதான் உல கத்தில் வாழ்வதற்கு தகுதியுள்ள முதல் நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி யென்றால் ஆத்திகம் நல்லதா இல்லை நாத்திகம் நல்லதா, சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார். மரங்களிலேயே உயர்ந்த மரம் சந்தன மரம். காரணம் அந்த மரத்தை சுற்றி எவ்வளவு நாகப்பாம்புகள் விஷம் கக்கினாலும் அந்த மரம் பாதிக்கப்படாது. அதுபோல் தமிழகம் சமூக நல்லிணக்கமும், மத நல்லிணக்கமும் ஓங்கி ஒலிக்கக் கூடிய மாநிலம். மதவெறி விஷப்பாம்புகளால் இந்த நல்லிணக்கத்தை எளிதாக சிதைத்து விடமுடியாது. அப்படிப்பட்ட தமிழர்களின் கோயில் களில்தான் இன்று பெயர் மாற்றம் செய்து வருகிறார்கள். அருள்மிகு வேம்புலியம்மன் ஆலயம் என்ற பெயரில் இருந்த கோயில் இப்போது அருள்மிகு சிறீ வேம்புலியம்மன் ஆலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இப்படித்தான் உள்ளே நுழைகிறார்கள். கொஞ்சம் கொஞ்ச மாக நுழைந்து கொண்டிருக்கிறார்கள். எனவே இதை தீவிரமாக ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.
அபாயகரமான நிலைக்கு மக்களை தள்ளியவர்கள்: மாதவன் ராமானுஜதாசன்
வேதகாலம்தொட்டே பொருளாதார சமத்துவம் இல்லாத காரணத்தால் கீழ்வகுப்பு படிநிலைகள் உருவாக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும் தற்போது தெரிவிக்கிறார்கள். அன்று வாழ்ந்த இனக்குழுக்களில் பலர் உடலுழைப்பு சார்ந்த வேலைகளுக்கு அடிமைகளாக்கப்பட்டதை வரலாறும், சூத்திரர்கள் போர்படைக்கு தலைமை தாங்கி போர்களம் கண்டதை மகாபாரதமும் விவரிக்கிறது. கால்நடை, நிலம், உற்பத்தி உடமைகளுக்கான மோதல்களே இத்தகைய கீழ்நிலைப்படி உருவான காரணம் என தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. சர்வம் சூன்யம், அணுவின் செயலே அண்டம் அனைத்தும், சர்வம் மாயை அல்ல அனைத்தும் சத்தியம் என பரிணமித்த பற்பல தத்துவ விளக்கங்களால் பல மதங்கள் தோன்றி மக்களை தம் நிலைப்பாட்டின்பால் நம்பிக்கையாளர்களாக நிலைநிறுத்திக்கொண்டுள்ளன. இந்த 21ஆம் நூற்றாண்டில் மனித நேயத்திற்கான பல வடிவங்களை கைக்கொண்டு ஒற்றுமை காக்க போராட வேண்டிய மிகவும் அபாயகரமான நிலைக்கு இந்த மதங்கள் தள்ளிவிட்டுள்ளன. மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கான நோக்கத்துடன் கிளாபத் இயக்கத்தை கையில் எடுத்தார். காலனி நாடாக வைத்திருந்த பிரிட்டிஷ் அரசை மத ரீதியான அரசியல் இயக்கங்கள் எதிர்க்கவில்லை. நாட்டு விடுதலைக்காக போராடியவர்களே மக்கள் ஒற்றுமையை கட்டிக்காத்தனர். அத்தகைய ஒற்றுமை இன்று எங்கே போனது. மத நம்பிக்கையும், மதப்பற்றும், மத வெறியானது எப்படி? என எண்ணிப்பார்க்க வேண்டும்.
வெறுப்பு அரசியல்
குஜராத் இனப் படுகொலையைத் தொடர்ந்து முஸாபர் நகர் வன்முறை மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான பல்வேறு தாக்குதல்கள் மதச்சார்பின்மையை நாசப்படுத்தியுள்ளன. “ஒரே நாடு, ஒரு மதம்” என்ற முழக்கத்துடன் மத ரீதியான உயர்வு தாழ்வுகளை ஏற்படுத்தி வெறுப்பு அரசியல் நடத்த இந்த மதவெறி சக்திகள் முனைப்பு காட்டுகின்றனர். பௌத்தர்களின் கயாவும், இவர்களின் இலக்கிலிருந்து தப்பவில்லை.
திவ்விய பிரபந்தத்தை பாட உரிமை மறுப்பு
1870இல் தமிழ்நாட்டில் நாகர்கோயில் அருகில் உள்ள குமாரக்கோயில் தீக்குழியில் சமத்துவ வழிபாட்டிற்காக நாடார்கள் இறங்கியபோது நாயர் உயர்சாதியினரும் காவல் துறையும் தடுத்து கலவரம் ஏற்படுத்தியதில் 150 பேர் உயிரிழந்தனர். இந்நிலை 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. ‘காஞ்சி வரதராஜர் சுவாமி கோயிலில், மணவாள மாமுனிகள் சன்னதியில் பிராமணர் அல்லாதவர்கள் சன்னதி வாசலில் தடுக்கப்படும் கொடுமையும், தமிழ்வேதம் திவ்விய பிரபந்தத்தை பாடும் உரிமையும் மறுக்கப்படுகிறது. இதற்கு காரணம் நான் முன்னர் குறிப்பிட்ட உயர்வு தாழ்வு காட்டும் ஜாதி மத சமய வேறுபாட்டு மதவெறி வெறுப்பு அரசியலே. இது மனித நேயமற்ற சகிப்புத்தன்மையற்ற மதவெறி அரசியல் அல்லவா? இந்திய மண்ணில் மத நல்லிணக்கம் காக்கப்பட்ட வேண்டும், மனிதநேயம் வளர வேண்டும் மதவெறி மடிய வேண்டும் என்றார் ராமானுஜதாசர்.
சென்னையில் நடைபெற்ற மதநல்லிணக்க மாநாட்டில் பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா குழுவினரின் தேசபக்தி பாடல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.