tamilnadu

img

மார்க்சுக்காகவே வாழ்ந்த ஏங்கெல்ஸ் - ஆர்.ராஜா

(இன்று (ஆக.5) தோழர் ஏங்கெல்ஸ் நினைவு நாள்)

“கார்ல் மார்க்ஸ்சுடன் இணைந்து விஞ்ஞான சோசலிசத்தை உருவாக்கிய மாமேதை பிரடெரிக் ஏங்கெல்ஸ் 1820 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் 28ஆம் தேதியன்று ஜெர்மன் நாட்டின் பிரய்யா பகுதியைச் சேர்ந்த பார்மென் என்ற நகரில் பிறந்தார். ஏங்கெல்ஸ் தந்தையார் நெசவு ஆலையின் முதலாளி, பல பருத்தி மில்லின் பங்குதாரரான பெரும் செல்வந்தர்.

தந்தையின் நிறுவனத்தில் ஓராண்டு பணியாற்றிய பின் 1838ஆம் ஆண்டு பெர்மன் நகரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் ஏங்கெல்ஸ் வேலைக்கு சேர்ந்தார். அந்த நிறுவன குடோன்களுக்கு வரும் புத்தகங்கள், பத்திரிகைக ளை படிக்கத்துவங்கி, படிப்பதே மிக முக்கிய வேலையாக மாற்றிக் கொண்டார். ஏராளமான உலக தத்துவங்களையும், விஞ்ஞானத்தையும் பல மொழிகளின் அறிவையும் பெற்றார். கவிதை எழுதுவதை பழக்கமாகக் கொண்டார். 1839 ஆம் ஆண்டு ஹாம்பர்க் நகரிலிருந்து வரும் “டெலி கிராப்” ஏட்டில் ஒரு கட்டுரை எழுதினார். உப்பர் பள்ளத்தாக்கு மக்களின் வாழ்க்கை, முதலாளித் துவ சுரண்டல், மத ஆதிக்கம் குறித்து எழுதினார். 16 மணி நேரம் வேலை வாங்கி அந்த நகரத்தில் தொழி லாளர்கள் சுரண்டப்படுவதை கண்டார். இதே காலக் கட்டத்தில்தான் லண்டனில் வசித்து வந்த ஜெர்மன் கம்யூனிஸ்ட்களோடு ஏங்கெல்ஸ்க்கு தொடர்பு கிடைத்தது.  1844 ஆம் ஆண்டு பாரிஸில் தங்கியிருந்த மார்க்ஸை ஏங்கெல்ஸ் சந்தித்தார். மார்க்சும், ஏங்கெல்ஸ்சும் பத்து நாட்கள் மார்க்சின் வீட்டில் தங்கி அரசியல் பொருளாதார தத்துவம், வரலாற்றில் இயக்கவி யல் குறித்த பொதுவான விதிகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். பாரிஸ் நகர தொழிலாளர் கூட்டங்களில் இருவரும் கலந்து கொண்டு பேசினர்.

மார்க்ஸின் வறுமையை ஏங்கெல்ஸ் அறிவார். எனவே அவர் ரைஸில் பிரதேசத்து சோசலிஸ்டு களை அழைத்து மார்க்சுக்கு நிதி திரட்ட கேட்டுக் கொண்டார். தன்னுடைய இங்கிலாந்து தொழிலா ளர்களின் நிலைமை என்ற நூலுக்கு கிடைத்த ராயல்டியை மார்க்சுக்கு கொடுத்து உதவினார்.  1848 - 1849 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் உருவான புரட்சிகர இயக்கத்தின் மீது “கொலோன் சதி” வழக்கு போடப்பட்டது. அதை எதிர்த்து போராடவும், வழக்கு நடத்தவும், மார்க்ஸ் - ஏங்கெல்ஸ்க்கு மேலும் மார்க்சின் பொரு ளாதார ஆராய்ச்சி தொடரவும் பணம் தேவைப் பட்டது. ஏங்கெல்ஸ் ஒரு முடிவுக்கு வந்தார். தனது தந்தையார் பங்குதாரராக உள்ள மான்செஸ்டர் நிறுவனத்தில் வேலைக்கு போவதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில் 1850 முதல் 20 ஆண்டுகள் வர்த்தக பிரதிநிதியாக பணியாற்றும் நிலை ஏங்கெல்ஸ்க்கு வந்தது. தொடர்ந்து மார்க்ஸ் குடும்பத்திற்கு உதவி வந்தார். 1852ஆம் ஆண்டு லண்டனில் நியூயார்க் டிரிபியோன் என்ற ஏட்டின் கட்டுரையாளராக மார்க்ஸை சேர்த்து விட்டார். அதற்கான ஒரு தொகை கிடைத்தது.மார்க்ஸ்க்கு லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மனி ஆகிய மொழிகள் தான் தெரியும். எனவே ஜெர்மன் மொழி யில் எழுதி தபால் மூலம் அனுப்பும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்பி வந்தார் ஏங்கெல்ஸ். 1860 ல் ஏங்கெல்ஸின் தந்தையார் காலமா னார். அந்நிறுவனத்தின் பங்குதாரரான ஏங்கெல்ஸ் பொருளாதார நிலை உயர்ந்து வந்தது. மார்க்ஸின் மூன்று புதல்விகளுக்கும் திருமணம் நடத்தி வைத்தார்.

1870ல் ஏங்கெல்ஸ் தனது நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்று லண்டனில் மார்க்ஸ் வீட்டின் அருகில் குடி பெயர்ந்தார். ஏங்கெல்ஸின் வருகை மார்க்ஸை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கார்ல் மார்க்ஸ் “மூலதனம்” நூலின் முதல் பகுதியை 1865 ஆம் ஆண்டு எழுதி முடித்தார். அச்சடிப்பதற்கு பணம் இல்லை. ஏங்கெல்ஸ் பணம் திரட்டி அவ்வாண்டு செப்டம்பரில் வெளியிட வைத்தார். முதலாளித்துவ பத்திரிகைகள் மார்க்ஸின் மூலதன நூலை வெளிப்படுத்திட வில்லை. எனவே ஏங்கெல்ஸ் தனது பெயரை போடாமல் விமர்சனமாக மார்க்ஸ் என்ன அப்படி கண்டுபிடித்துவிட்டார்? என கேள்வி எழுப்பி, மூலதன நூலை பிரபலமடைய செய்தார். 1881 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி மார்க்ஸின் மனைவி ஜென்னி மார்க்ஸ் நுரையீரல் புற்று நோயால் பாதிப்படைந்து காலமானார். ஹைகேட் கல்லரையில் ஜென்னியின் உடலை அடக்கம் செய்ய ஏங்கெல்ஸ் ஏற்பாடு செய்தார். கடுமையாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தால் மார்க்ஸால் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிய வில்லை. ஏங்கெல்ஸே அனைத்து இறுதி நிகழ்ச்சிக ளையும் செய்தார்.

1883ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மார்க்ஸின் மூத்த மகள் தனது 38 வயதில் திடீரென மரணமடைந்தார். மகளின் மரணம் மார்க்ஸை நிலைகுலையச் செய்துவிட்டது. ஏங்கெல்ஸ் தினமும் மார்க்ஸின் வீட்டிற்கு சென்று அவரை தேற்றினார். மார்க்ஸ் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் 1883 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி மார்க்ஸின் வீட்டருகே நின்றிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அங்கு ஏங்கெல்ஸிடம் மார்க்ஸ் மரணமடைந்து விட்டதாக கூறினார்கள். உள்ளே சென்று பார்த்த பொழுது மார்க்ஸ் சாய்வு நாற்காலி யில் சிந்திப்பதை நிறுத்திவிட்டு அமர்ந்திருந்தார். மார்க்ஸின் இறுதி நிகழ்வு 17 ஆம் தேதி மாலையில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மார்க்ஸின் மனைவி ஜென்னி மார்க்ஸ் கல்லறைக்கு அருகில் மார்க்ஸ் புதைக் கப்பட்டார். மார்க்ஸின் உடலைத் தாங்கிய சவப் பெட்டி குழிக்குள் இறக்கும் பொழுது ஏங்கெல்ஸ் அழுது கொண்டே நிகழ்த்திய உரை இன்றளவும் வரலாற்றில் சிறந்த இலக்கியமாக போற்றப்பட்டு வருகிறது.  மார்க்ஸ் இறந்த சில நாட்களுக்கு பிறகு மார்க்ஸின் இளைய மகள் எலியானா, மார்க்ஸி னால் முடிக்க முடியாமல் குறிப்புகளாக  எழுதி வைத்திருந்த மூலதனம் நூலின் இரண்டு பாகங்களை கொண்டு வந்து ஏங்கெல்ஸிடம் கொடுத்தார். தனது தந்தையாரின் விருப்பத்தை நிறைவேற்றக் கோரினார். மார்க்ஸின் கையெ ழுத்தை படிக்கத் தெரிந்தவர்கள் இரண்டு பேர், ஒரு பேர் ஜென்னி, மற்றொருவர் ஏங்கெல்ஸ். சில ஆண்டு முயற்சிக்கு பிறகு “மூலதனம்” நூலின் இரண்டு பாகங்களையும் வெற்றிகரமாக வெளியிட்டார். 1895 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மார்க்ஸின் உயிர்த் தோழன் அறிவு மேதை மார்க்ஸ்சுக்காகவே வாழ்ந்த பிரடெரிக் ஏங்கெல்ஸ் என்ற மாமனிதர் மறைந்தார். 

கட்டுரையாளர் : திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்) திருச்சி