முகநூல் பதிவாளர்கள் மீது சிபிஎம் புகார்
நாகர்கோவில், ஜூன் 23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயலா ளர் ஆர்.செல்லசுவாமி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஜூன் 16 ஆம் தேதியன்று அகில இந்திய அளவில் கொரோனா நிவாரணம் கேட்டு சிபிஎம் போராட்டம் நடத்தியது. தில்லியில் நடந்த இப்போராட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த புகைப்படத்தை போட்டோ ஷாப் தொழில்நுட்பம் மூலமாக மார்பிங் செய்து சீன ஆதரவு போராட்டமாக உருமாற்றம் செய்து அவதூறான வாசகங்களை எழுதி முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
வேண்டுமென்றே திட்டமிட்டு எங்கள் கட்சியையும், தலைவர்களையும் அவதூறு செய்யும் குற்றச் செயலினை புரிந்துள்ளனர். இந்தப் பதிவானது எமது கட்சியின் தலைவர்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும், மரியாதையையும் சேதப்படுத்தும் நோக்கிலும், தேசவிரோதிகளாக சித்தரிக்கும் நோக்கிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பொய்யான விபரங்கள் அடங்கிய பதிவு எங்களது கட்சி உறுப்பினர்களையும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. எமது கட்சிக்கும், தலைவர்களுக்கும் தீங்கு இழைக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் வேண்டுமென்றே இவ்வாறான பதிவுகளை எதிரிகள் வெளியிட்டுள்ளனர். இந்த பதிவு கடந்த 2020 ஜூன் மாதம் 19 ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு சிவபெருமாள் மற்றும் செல்வராஜ்சக்தி என்பவர்களின் முகநூல் கணக்குகளில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி இருபிரிவினரிடையே மோதலை உருவாக்கும் விதத்திலும், அவதூறு பரப்பியும் புரிந்துள்ள குற்றச் செயல் மீது வழக்கு பதிவு செய்தும், அவர்களது சமூக வலைதள கணக்குகளை முடக்கியும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.