tamilnadu

img

கொரோனாவால் முதல்வரின் தனிப்பிரிவு செயலாளர் பலி

சென்னை ஜூன் 17-  கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சரின் தனிப்பிரிவு செயலாளர் தாமோதரன் என்பவர் சென்னை தலைமைச் செயலகத்தில் இதற்கு முதல் பலியாகியுள்ளார். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் தலைநகர் சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. மாநில அரசும் சுகாதாரத் துறையும் சில நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. ஆனாலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. திணறி வரும் மாநில அரசு, சுகாதாரத் துறை செயலாளரை மாற்றியது. வீடு வீடாகச் சென்று பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவித்ததும் ஏட்டளவில்தான் உள்ளது.  இந்நிலையில் கொரோனா தொற்று உறுதியான  தமிழக முதல்வரின் அலுவலக தனிச் செயலாளர் தாமோதரன் என்பவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியிலும் கோட்டை வட்டாரத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் இரங்கல்

முதலமைச்சரின் தனிப்பிரிவு செயலாளர் தாமோதரன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு : தலைமைச் செயலகம், பொதுத் துறை, முதலமைச்சர் அலுவலகப் பிரிவில் முதுநிலை தனிச் செயலராகப் பணியாற்றி வந்த தாமோதரன்  உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் 17.6.2020 அதிகாலை காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். கொரோனா தடுப்புப் பணியின் போது, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய தாமோதரனின் சேவை மகத்தானது.  தாமோதரனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.   அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.