tamilnadu

img

கரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறி தாக்குதல்

கரூர், மே 23- கரூர் மாவட்டம் சின்னமலைபட்டியில் தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க சக்திகள் நடத்திய கொடூரத் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இது தொடர்பாக கள ஆய்வை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் பி.ராஜூ, மார்க்சிஸ்ட் கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் ராஜா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொருளா ளர் வழக்கறிஞர் சரவணன், மாவட்டக்குழு உறுப்பி னர் கணேஷ் ஆகியோர் மேற்கொண்டனர். இது தொடர்பாக ராஜூ கூறியதாவது:

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், சின்னமலைபட்டி, இந்திரா நகர் காலனியில் 30க்கும் மேற்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள்  அருகிலுள்ள கரூர் நகருக்கு பல்வேறு வேலைகளுக்கு சென்று இரண்டு சக்கர வாக னங்களிலும் நல்ல துணிகளை அணிந்து வருவதை ஆதிக்கசாதியினர் பார்த்து சகித்துக் கொள்ள முடியாமல் இவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். 

இதே ஊரில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு சமூகத்தை சேர்ந்த ஆதிக்க சாதியினர் சேர்ந்த குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் பொது குடிநீர் பைப்பில் தண்ணீர் குடித்துள்ளனர். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த ஆதிக்க சாதியை சேர்ந்தவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்த சிறுவர்களைப் பார்த்து சாதிப் பெயரைச் சொல்லி திட்டியும், கடுமையாக பேசியும் மிரட்டியுள்ளார். இந்த குடிநீர் பைப்பில் தண்ணீர் குடிக்க கூடாது என்றும்  மிரட்டியுள்ளார். அந்த சிறுவர்கள் தனது பெற்றோர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர். 

சிறுவர்களை தகாத முறையில், சாதி பெயரை சொல்லி திட்டியவரை சிறுவனின் பெற்றோர் நேரில் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால் சரியான பதில் தெரிவிக்காத அவர், பெற்றோர்க ளையும் சாதி பெயரை சொல்லியும், தகாத வார்த்தையால் திட்டி அவமானப்படுத்தி அடிக்க சென்றுள்ளார். இதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை யடுத்து அவர், ஆதிக்க சாதியினரின் ஊர் நாட்டா மைகளிடம் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களை தாக்க வருவதாகவும், தகாத வார்த்தை பேசுவதாகவும் குற்றச்சாட்டை கூறி ஊர் பகவதி அம்மன் கோவில் முன்பு கூட்டம் போடச் செய்துள்ளார்.

இந்த கூட்டத்தில் விசாரணையின் போது ஆதிக்க சாதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் தலித் சமூகத்தை சேர்ந்த இருவரை கோவில் முன்பு கட்டி வைத்து கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தடுக்க சென்றவர்க ளையும் கடுமையாக தாக்கியுள்ளனர். 6 மாத கர்ப்பிணி ஒருவரையும் மனிதாபிமானம் இன்றி ஆதிக்க சாதியினர் கொலை வெறியுடன் தாக்கியுள்ளனர். மேலும் 3 பெண்களையும் பலத்த காயங்கள் ஏற்படும் வகையில் தாக்கி யுள்ளனர். இச்சம்பவம் குறித்து மாயனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். 

பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக 18-ம் தேதியன்று அனுமதிக்கப்பட்டனர். ஆனால்  உரிய சிகிச்சை அளிக்காமல்  கடந்த 19-ம் தேதி காலையில் உடனடியாக வீட்டிற்கு அனுப்பி விட்டனர். பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிக்கசாதியினர் தலித் மக்கள் காவல்நிலை யத்துக்கு செல்லாதவாறு அரிவாள்,  கம்புக ளுடன் வழியில் தடுத்து நிறுத்தியுள்ளனர். பாதுகாப்புக்கு வந்த இரண்டு போலீசார் இதனை பார்த்த உடன் மாயனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து காவல்துறையினர் வந்தவு டன் தலித் மக்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். 

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பால், தண்ணீர், மின்சாரம் உள்ளிட்டவை வழங்காமல் சித்ர வதைக்குள்ளாகியுள்ளனர். கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் நேரில் விசாரணை செய்து இப்பிரச்ச னையை தீர்த்து வைத்துள்ளார். பின்னர் 19-க்கும் மேற்பட்ட ஆதிக்க சாதியினர் மீது புகார் தெரிவித்தும் மூன்று நபர்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து, ஒருவரை மட்டும் கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதலுக்கு உள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் மீதே காவல்துறை வழக்கு பதிவு செய்து தாழ்த்தப்பட்ட மக்களை சேர்ந்த ஒருவர் மீது பொய்யான வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். இதனை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. 

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை முற்றிலும் ரத்து செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாது காப்பு வழங்க வேண்டும். ஆதிக்க சாதியினர் தலைமறைவாக உள்ள மற்ற நபர்கள் மீதும் உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டும்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த கோரிக்கை நிறை வேறாவிட்டால் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பொதுமக்களை திரட்டி மாவட்ட அளவிலான போராட்டம் நடத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார். 

சிபிஎம் கண்டனம்

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் கே.கந்த சாமி கூறியதாவது: சின்னமலைப்பட்டி தாழ்த்தப் பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறி தாக்குதல் நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கரூர் மாவட்டக் குழு வன்மை யாக கண்டிப்பதுடன், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தொடர்ந்து ஆதிக்க சாதியினர் திட்டமிட்டு கொலை வெறி தாக்குதல் நடத்துவதை தடுத்திட நிரந்தர தீர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும், பாதிப்புக்குள்ளான தாழ்த்தப் பட்ட மக்கள் மீது பதியப்பட்ட பொய்யான வழக்கு களை உடனே ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப் பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். மாவட்டத்தில் இது போன்ற தாழ்த்தப் பட்ட மக்கள் மீது சாதி வன்கொடுமைகள் நடத்தாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அனைத்து முற்போக்கு அமைப்புகள், கட்சிகளை இணைத்து அனைத்துப் பகுதி மக்களையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று இவ்வாறு அவர் கூறினார்.

        (ந.நி)