களப்பணியில் கம்யூனிஸ்டுகள்
தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளம் நிறைந்த கீழத்தஞ்சைப் பகுதியைச் சார்ந்த பல மூத்த தோழர்களை ஏற்கனவே ‘களப்பணி யில் கம்யூனிஸ்ட்டுகள்‘ தொடரில் சந்தித்திருக்கிறோம். தற்போது நாம் சந்திக்கும் தோழர் அய்யாக்கண்ணு. கீழத்தஞ்சையில் மட்டுமல்ல இந்தத் தொடரிலேயே இதுவரை இடம்பெற் றுள்ள தோழர்களில் மிக மூத்தவரா வார். அவரது வயது – 99. நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் பிரிஞ்சுமூலை கிராமத்தில் ஏகராஜபுரம் பகுதியில் 1920 அக்டோ பர் 8 அன்று பிறந்தவர் அய்யாக் கண்ணு. தலித் சமூகம் என்பதோடு வறு மையிலும் உழன்ற குடும்பம் என்ப தால், பெற்றோரால் இவரை ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கவைக்க முடிய வில்லை. சிறுவயதிலேயே இவர் வயல்களில் கூலிவேலைக்குச் சென் றார். கீழைத்தஞ்சை முழுவதும் கொடு மையான பண்ணைஅடிமை முறை கோலோச்சிய காலகட்டம் அது.
பிரிஞ்சுமூலை கிராமத்தின் மொத்தநிலம் 1060 வேலி. அந்தநிலங் கள் அனைத்தும் ஆறு பண்ணையார்க ளுக்குச் சொந்தமாக இருந்தன. காடந்தத்தி, பிரிஞ்சுமூலை, ஏகராஜ புரம், தோப்படித்தெரு, தலைஞாயிறு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவ சாயத்தொழிலாளர்கள் அந்த ஆறு மிராசுகளின் கொடுமையான சுரண் டல்களுக்கு உள்ளான பண்ணை அடி மைகளாக வேலைசெய்துவந்தனர். சூரியன் உதிக்கும் முன் வேலைக்கு வந்துவிட வேண்டும். சூரியன் மறைந்த பிறகுதான் வயல் களை விட்டு வெளியேறவேண்டும். இதுதான் பண்ணையடிமைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த எழுதப்படாத சட்டம். சற்றேதாமதமாக வேலைக்கு வந்தால்கூட பண்ணை ஏஜெண்டுகள் ஆடுமாடுகளை அடிப்பதுபோல அடிப்பார்கள். இத்தகைய அடிமை முறையை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி யும் விவசாயிகள் இயக்கமும் வலுவாக போராடிக் கொண்டிருந்தன. “அப்படிப்பட்ட போராட்டங்களின் போது எங்கள் கிராமத்திற்கு களப்பால்குப்பு வந்து எங்களுக்கு போராட்ட உணர்வூட்டுவார்,” என்று அந்தநாட்களை நினைவுகூர்கிறார் அய்யாக்கண்ணு.
பண்ணையடிமையான ஒருசிறு வன் ஒருநாள் தாமதமாக வேலைக்கு வந்திருக்கிறான். “ஏய்பொடியா நில்லு, மணி என்ன இப்ப.”என பண்ணையாரின் ஏஜெண்ட் கேட்டி ருக்கிறான். அந்தச்சிறுவன் ஏர் மாட்டைப்பூட்டி உழஆரம்பித்தான். ஏஜெண்ட் வேகவேகமாகஓடிவந்து, “சின்னபொடிப்பய, சொல்லச்சொல்ல ஏர்பூட்டுற, அவ்வளவு தெனாவெட் டாடா உனக்கு,”எனக்கேட்டபடி தன்கையிலிருந்த குடையால் ஓங்கி அடித்திருக்கிறான். வலிதாங்கமுடியா மல் அந்த விவசாயத்தொழிலாளிச் சிறுவன் குடையைப் பறித்துத் திருப்பித்தாக்கினான். அடுத்த நாள்,“அந்தபொடியன் மட்டும் வேலை செய்யக்கூடாது,”என ஏஜெண்ட் தடுத்தான். அங்கு வந்த பண்ணையார், தன் ஏஜெண்ட் செய்தது தவறு என்று கூறி விவசாயத்தொழி லாளி வேலைசெய்யட்டும் என்றார். பண்ணையார் இவ்வாறு தனது ஏஜெண்ட் மீது தான் தவறு என்று சொன்னதன் பின்னணி என்ன? மாவட்டம் முழுவதும் பண்ணை யடிமை முறையை எதிர்த்து வலு வாகவும் பரவலாகவும் நடந்து வந்த போராட்டம் அவரை அப்படிச்சொல்ல வைத்தது என்றால் மிகையில்லை. ஏர்பிடித்த கையால், தன்னைத் தாக்கிய குடையையும் பிடித்த அந்தப் பொடியன் தான் பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப் பூண்டி வட்டச்செயலாளராக பணி யாற்றிய தோழர்கே.ராமச்சந்திரன்.
1940களில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் களப்பால்குப்பு, எஸ். வடிவேல், சீனன், கே.ராமச்சந்தி ரன் போன்ற தோழர்களின் முன்முயற்சி யால் கம்யூனிஸ்ட்கட்சிக்கிளைகள் தொடங்கப்பட்டன. தோழர் மணலி கந்தசாமி தலைமையில் தலைஞாயிறு ஜெகநாதய்யர் பங்களாவில் நடந்த கூட்டத்தில் அய்யாக்கண்ணு கட்சி உறுப்பினரானார். கிளை அமைக்கப்பட்டு கட்சிக்கொடி யேற்றப்பட்டதை இயல்பான நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு முடிவின்படி பி.சீனிவாசராவ் தஞ்சை மாவட்டத்திற்கு வந்த பிறகு சாணிப்பால் – சாட்டையடி, தீண்டாமைக்கொடுமைகளுக்கு முடிவுகட்டவும் நிலப்பிரபுத்து வச் சுரண்டலைத் தடுக்கவும் போர்க்குணமிக்க இயக்கங்கள் நடைபெற்றன. இனியும் பண்ணை அடிமை முறையையும் கோரவடிவி லான தீண்டாமை கொடுமையையும் தொடரமுடியாது என்ற நிலைமை உரு வானது. களப்பால் குப்புவும் கலந்து கொண்ட வரலாற்று சிறப்புமிக்க முத்தரப்புக்கூட்டத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி சாணிப்பால் – சாட்டையடி முறை ஒழிக்கப்பட்டது.
1948இல்கட்சிதடை செய்யப்பட்ட காலத்தில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட பல தோழர்கள் தலைமறைவாக இருந்தனர். காவல்துறை அய்யாக் கண்ணுவை கைது செய்ததோடு ‘மலேயாகோவிந்தசாமி எங்கே, ’ ‘கே.ராமச்சந்திரன் எங்கே’எனக்கேட்டு வர்ணிக்கவியலாத பலசித்ரவதை களைச் செய்தது.தோழர் அய்யாக் கண்ணு அந்த வதைகளுக்கு வணங்கி விடவில்லை, தலைவர்களைக் காட்டிக் கொடுக்கவுமில்லை. 1949இல் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான கோவிந்தசாமி பிள்ளை தலைஞாயிறு கிராமத்தில் தங்கி கட்சிகட்டும் பணியை செய்தார். அக்காலத்தில் கோவிந்தசாமி, ஏ.கே.சுப்பய்யா, பி.எஸ்.தனுஸ்கோடி தனது கிராமத்திற்கு வந்ததை அய்யாக் கண்ணு பெருமையோடு குறிப்பிட்டார்.
விஸ்வலிங்கம் என்ற ஒரு பண்ணை யார் தனது பண்ணையில் காத்தாயி என்ற பெண்ணைச் சாணி அள்ளும் வேலையில் ஈடுபடுத்தியிருந்தார். சாணியள்ளும் பெண்தானே என்று காத்தாயியை பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கினார் விஸ்வ லிங்கம். அந்தப்பெண்ணை பண்ணை யாரே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கம்யூனிஸ்ட் தோழர்கள் அதை ஆத ரித்தனர். இதனால் பண்ணையாரின் அடியாட்களுக்கும் கட்சித்தோழர்க ளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. செல்வாக்குடன் இருந்த பண்ணை யார் கொடுத்த பொய்ப்புகாரை எடுத்துக்கொண்ட காவல்துறையினர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட தோழர்களைக் கைதுசெய்தனர். அந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு அய்யாக்கண்ணு உள்ளிட்ட பல தோழர்கள் ஓராண்டும் இரண்டு மாதங்களும் சிறையில் இருக்க வேண்டியதாயிற்று.
1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் ஒன்று பட்ட தஞ்சையில் 6 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றது. இதில் நாகப்பட்டிணம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் எஸ்.வடிவேல் போட்டியிட்டார். அவருக்காக மற்றதோழர்களோடு சைக்கிளில்சென்று, பாட்டுப்பாடி, மக்களிடம்பேசி வாக்குசேகரித்ததைக் குறிப்பிட்ட அய்யாக்கண்ணு. அதை இப்போதும் பெருமையாகக் கருதுவ தாக அய்யாக்கண்ணு கூறினார். 1952ஆம் ஆண்டு குத்தகை விவ சாயிகள் பாதுகாப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது.“தஞ்சையை கம்யூனி சம் என்ற பூதம் ஆட்டிக் கொண்டி ருக்கிறது. நான் கொண்டுவந்த சட்டத்தை மிராசுதாரர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார் முதலமைச்சர் ராஜாஜி. பண்ணை அடிமை முறை ஒழிக்கப் பட்டது. குறிப்பிட்ட பண்ணைகளில் அடிமைத் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர்கள் இனிதாங்கள் விரும்பும் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று வேலைகளில் சேரமுடியும் என்றநிலை உருவானது. விவ சாயத்தொழிலாளர் நலன்களுக்காகப் போராடிய விவசாயிகள் சங்கம் நில விநியோகத்திற்காகவும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தியது.
1960களில் அவருடைய கிராமத்தி லும் சுற்றுவட்டார கிராமங்களிலும் விவசாய தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான வேலை நிறுத்தப் போராட்டங்கள் பல நடைபெற்றன. அச்சமயங்களில் நிலச்சுவாந்தார்க ளின் அடியாட்களுடன் நேருக்கு நேர் மோதல்கள் ஏற்பட்டன. விவ சாயத் தொழிலாளர்கள் மீதும், கட்சித் தலைவர்கள் மீதும் பொய் வழக்கு கள் புனையப்பட்டன. அன்றைய இத்தகைய போராட்டங்களில் கலந்து கொண்டு பொய் வழக்குகளையும் சிறைக் கம்பிகளையும் எதிர்கொண்ட வர் தான் தோழர் அய்யாக்கண்ணு. 1961ஆம் ஆண்டு மாநிலம்முழுவ தும் நடந்த நிலமீட்சி போராட்டத்தில் திருத்துறைப்பூண்டி மறியலில் கலந்து கொண்டு மலேயா கோவிந்த சாமி, எஸ்.வடிவேல், ராமச்சந்திரன், நீர்முளைமுத்து, சீனன், குமாரசாமி, அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டனர். 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது பி.எஸ்.தனுஷ்கோடி தலைமையில் தானும் அதில் இணைந்ததாக அய்யாக் கண்ணு தெரிவித்தார்.
1967 ஆம் ஆண்டு பிரிஞ்சுமூலை நடுத்தெரு தலித் மக்கள் குடியிருக்கும் மனைகளுக்கு பட்டா வேண்டுமென போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டங்களில் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த பி.எஸ்.தனுஸ்கோடி கலந்துகொண்டார். இறுதியில் அரசு நிர்வாகம் பணிந்தது, சுமார் 100 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இப்போராட்டத்தி லும் முன்னணி பாத்திரம் வகித்தார் அய்யாக்கண்ணு. அக்காலத்தில் மிராசுதாரர்கள் பெண் விவசாயத் தொழிலாளர்களை மரியாதைக் குறைவாக நடத்துவ தும், வாடி, போடி என்று பேசுவதும் சர்வசாதாரணமாக இருந்தது. மணக்குடி கிராமத்தில் ஒரு மிராசு தாரர் இப்படி நடந்துகொண்ட போது, அய்யாக்கண்ணு உள்ளிட்ட தோழர் கள் அதைத் தட்டிக் கேட்டு தகராறு செய்தனர். இறுதியில் மணக்குடி மிராசு தார் மன்னிப்புக் கேட்டார். அதன் விளைவாக மற்ற இடங்களிலும் பெண்களை அவமதிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் மலேயா கோவிந்தசாமி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
1970 ஆம் ஆண்டு தோழர் அய்யாக் கண்ணு கட்சியின் கிளைச் செயலாள ராகத் தேர்வு செய்யப்பட்டார். 1976 ஆம் ஆண்டு கட்சியின் முடிவுப்படி அவசர நிலைக் காலத்தில் தலைமறைவுப் பணிகளைச் செய்துள்ளார். 1977 ஆம் ஆண்டு கட்சியின் திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழுவுக்கு தேர்வு செய்யப் பட்டார். மேலும் விவசாயத் தொழிலா ளர் சங்க வட்டக்குழு உறுப்பினராக வும் பணியாற்றியிருக்கிறார். தலை ஞாயிறு ஒன்றியத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் பல கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று ‘தீக்கதிர்’ நாளிதழ் விநியோகம் செய்துள்ளார். கூட்டங்க ளில் பாட்டுப்பாடுவதுடன், நல்ல பேச்சாளராகவும் பங்களித்ததாக மறைந்த தோழர் மீனாட்சிசுந்தரம் (நாகை வட்டச் செயலாளர்) ஏற்கெனவே கூறியிருக்கிறார்.
1957ஆம் ஆண்டு அய்யாக் கண்ணுக்கும் காசியம்மாளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வடி வேலு தலைமையில் சீர்திருத்த முறை யில் திருமணம் நடைபெற்றது. நான்கு மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகன் ராஜா, கட்சியின் தலை ஞாயிறு ஒன்றியக் குழுவிலும், வாலி பர் சங்கத்தின் ஒன்றியத் தலைவராக வும் பணியாற்றிவருகிறார். ராஜாவின் மனைவியும் கட்சி உறுப்பினராகவும் உள்ளார். இன்னொரு மகன் ரமணி, உணவுப்பொருள் வழங்கல் துறை யில் பணியாற்றுகிறார். சி.ஐ.டி.யு. சங்கத்தில் உள்ளார். மகள் சந்திரா வும் கட்சி உறுப்பினர், காடந்தத்தி ஊராட்சி மன்ற தலைவராக செயல் பட்டுள்ளார். மருமகன் அம்பிகாபதி (காடங்கத்தி) கட்சி மாவட்டக் குழு உறுப்பினராக இருந்தவர், உடல் நல மில்லாமல் காலமானார். இன்னொரு மகன் கல்யாண சுந்தரம், விவசாயத் தொழிலாளி. மூத்தமகன் சுப்பிரமணி யன், வேளாண் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், கட்சி ஆதரவாளர். அய்யாக்கண்ணு குடும்பமே கட்சி குடும்பம். இந்த கிராமத்தில் கட்சிக் கிளை உள்ளது. வி.ச, விதொச, வாலி பர், மாதர் அமைப்புகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு தீக்கதிர் பத்திரி கையும் வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற் கும் தோழர் அய்யாக்கண்ணுவுக்கும் ஒரே வயது! கட்சி உருவான 1920ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 8 ஆம் தேதி பிறந்தவர். (கட்சி உருவானது 1920 அக்டோபர் 17) இன்று 99 வயதி லும் கட்சி உறுப்பினராக தொடர்கிறார். அய்யாக்கண்ணு போன்ற தோழர்கள் தான் அக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அடித்தளத்தை உருவாக்கிய வர்கள். கம்யூனிஸ்ட் இயக்கம் உரு வான நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இவ்வாண்டில், சிறு வயதிலிருந்தே பண்ணையடிமையாக இருந்து, விவசாயத் தொழிலாளி யாக உருவாகி, கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைந்து, கடைசி வரை அடக்கு முறைகளை எதிர்கொண்டு தன்னு டைய கிராமத்திலும் சுற்றுவட்டாரத்தி லும் கட்சி வளர்ச்சிக்காக, மக்க ளுக்காக அர்ப்பணிப்போடு பாடுபட்டு இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர் அய்யாக் ண்ணுவின் முன்னுதாரணக் களப்பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.