மும்பை
உலகின் முதன்மையான உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசன் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை காரணம் காட்டி நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரை ரத்து செய்ய நேரிட்டால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு, ஸ்பான்சர்களுக்கும் பலத்த நஷ்டம் ஏற்படும் என்பதால், நடப்பாண்டில் எப்படியாவது ஐபிஎல் தொடரை நடத்தியாக வேண்டும் என்ற நினைப்பில் பிசிசிஐ உள்ளது. ஆசியாவின் கொரோனா மையமாக முளைத்துள்ள இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடரையை நடத்த இயலாது என்றாலும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் அல்லது இலங்கையில் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. மேலும் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த டி-20 உலக்கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டது வேறு பிசிசிஐ-க்கு சாதக சூழலை ஏற்படுத்தியுள்ளதால், நடப்பாண்டிற்குள் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் முனைப்பில் இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளது. அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஐபிஎல் எங்கு நடத்தினாலும் மத்திய அரசின் அனுமதி கண்டிப்பாக வேண்டும் என்பதால், ஐபிஎல் தொடர் நடத்த அனுமதி வேண்டும் என மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் கூறியதாவது," ஐபிஎல் தொடரை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவை என்பதால் மத்திய அரசிடம் ஐபிஎல் நிர்வாகம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது. ஐபிஎல் அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும். கொரோனா சூழலை கருதி செப்டம்பரில் இந்தியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடத்தப்படும்" என அவர் கூறியுள்ளார்.