tamilnadu

img

அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்

கோபி, ஜூன் 6-கோபி தொகுதியில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளை பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார். கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ஒன்றியம், கெட்டிச்செவியூர், பெத்தாம்பாளையம், நம்பியூர், கடத்தூர், காராப்பாடி, அளுக்குளிஉள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப்பள்ளிகளில் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தின் மூலம் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டது. இவற்றை தமிழக பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு இளைஞர் நலத்துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது,தற்போது மிதிவண்டியில் செல்லும் மாணவர்கள் வரும் காலத்தில் விமானங்களில் செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. வரும் பத்தாம் தேதிக்குப் பிறகு மடிகணினி வழங்கப்படும். 9,10,11,12 ஆகிய வகுப்புகள் கணினிமயமாக்கப்படும். அதற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகம் பள்ளிக் கல்வித்துறையில் முதல் மாநிலமாக திகழ்கிறது. பள்ளிக்கல்வித்துறைக்கு என தனியாக தொலைக்காட்சி உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் எவ்வாறு கல்விகற்கின்றார்களோ அதைக்காட்டிலும்  சிறப்பாக அரசு பள்ளி மாணவவர்களுக்கு கல்வி போதிக்கப்படும். மாணவர்கள் முன்னேற வேண்டும் என்றாலும், தமிழகம் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும் என்றாலும், கல்வி ஒன்றால்தான் முடியும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு புதியதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல. முயற்சி இல்லை என்றாலும் மரணம் தான்.முயற்சி செய்யுங்கள், வெற்றி பெறுங்கள். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.ஏ.செங்கோட்டையன், நீட் தோவில் வெற்றி பெற்றவர்களின் புள்ளி விபரங்கள் இது வரை நான் வாங்கவில்லை. வாங்கிய பின்னர் எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று அறிவிக்கப்படும். 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் என 82 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பணிவாய்ப்பு வழங்கும் நிலையில் அரசு இல்லை. மாணவர்களின் சேர்க்கை அதிகாரித்தால் தான் பணிவாய்ப்புகள் வழங்கப்படும். இந்தாண்டு இரண்டு லட்சம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கையைப் பொருத்து மதிப்பெண்கள் அடிப்படையில் பணிவாய்ப்பு வழங்கப்படும். தற்போது 7 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர் எனக் கூறினார்.