ஈரோடு, ஜூலை 11- பெருந்துறை சிப்காட்டில் குளிர்பான கம்பெனிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெருந்துறை சிப்காட்டையொட்டி வரப்பாளையம் ஊராட்சி, ஓடைக்காட்டூரில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் ஒரு குளம் உள்ளது. இக்குளம் இப்பகுதியின் முக்கிய நீராதாரமாக விளங்கியது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிப்காட்டில் செயல்படும் சாயத்தொழிற்சாலைகளின் பொதுசுத்திகரிப்பு நிலையத்தில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறிய பல லட்சம் லிட்டர் நச்சு கழிவு நீர் குட்டப்பாளையம் ஓடை வழியாக சென்று இக்குளத் தில் தேங்கியது. இதன்பின் சாயம் மற்றும் தோல் தொழிற்சாலைகளின் பொதுசுத்திகரிப்பு பகுதியில் இருந்து கழிவு நீர் வெளியேறி, ஓடை வழியாக இக்குளத்தில் தேங்கி வருகிறது. மேலும், பல்லாயிரக்கணக்கான டன் எடை யுள்ள நச்சு திடக்கழிவுகள் இக்குளத்தில் புதைந்துள்ளன. இதன் காரணமாக இக்குளத்தில் உள்ள தண்ணீரில் லிட்டருக்கு 5000 டிடிஎஸ் என்ற அளவுக்கு மேல் மாச டைந்துள்ளது. ஆகவே, மழைக்காலம் தொடங்கும் முன்பாக இக்குளத்தில் புதைந்துள்ள திடக்கழிவுகளை அகற்றி குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமீபத்தில் கருங்காட்டூரில் நடைபெற்ற பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளனர். மேலும், சிப்காட்டில் விதிகளைத் தளர்த்தி பொடாரன் குளிர்பானக் கம்பெனி உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சுமார் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறையும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும். எனவே, பொடாரன் குளிர்பானக் கம்பெனிக்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.