கோபி, மே.6- கோபிசெட்டிபாளையம் சாமிநாதபுரத்தில் மதுக்கடைகள் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பாதிப்பால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிரப்பிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் மே 7 ஆம் தேதி முதல் அரசு மதுபானக் கடைகளை திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கொரொனா நோய் சமூக தொற்றாக ஏற்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் திறப்பால் அதிகளவு நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து மே 7 ஆம் தேதியன்று காலை மதுக்கடைகள் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புபட்டை அணித்து வீடுகளின் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் புதனன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சாமிநாதபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி மதுக்கடைகள் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழக அரசு மதுக்கடைகள் திறப்பிற்கு அனுமதியளித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இப்போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.