ஈரோடு மாவட்டம் சிவகிரி இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஷ் மற்றும் ஞானசேகர் ஆகியோருக்கு ஜூன் 2 வரை நீதிமன்றக் காவல் விதித்து எழுமாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி (72) - பாக்கியம் (63) ஆகியோர், கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்த பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. குற்றவாளிகளைக் கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஷ் மற்றும் ஞானசேகர் ஆகிய 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், மரக்கட்டையால் அடித்து முதிய தம்பதியை கொன்றதாக கைதான 4 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஆச்சியப்பன், மாதேஷ்வரன், ரமேஷ் ஆகிய 3 பேரும் ஏற்கனவே கொள்ளை வழக்குகளில் தொடர்புள்ளது. ரமேஷ், மாதேஸ்வரன், ஆச்சியப்பன் மீது 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன; ஞானசேகரன் நகைக்கடை உரிமையாளர் என்பதும், இவர்கள் கொள்ளையடித்து வரும் நகைகளை விற்று தருபவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கும்பல் 6 மாதங்களில் 5 பேரைக் கொன்று நகைகளை கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது. இந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும், ஜூன் 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து எழுமாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.