tamilnadu

img

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில், கடந்த சில மாதங்களாக இழுபறி நிலவியது. இதன் காரணமாக 650 தொகுதிகளுக்கும் அண்மையில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சி அதிக இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைத்ததால், பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் தக்கவைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பிரெக்சிட் ஒப்பந்தத்தில் சிறு மாற்றங்களை செய்து அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நேற்று போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்தார். பின்னர் அதன் மீதான வாக்கெடுப்பு  நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில், பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 358 உறுப்பினர்களும், எதிராக 234 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்நிலையில், 124 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.   

இதையடுத்து, வரும் ஜனவரி மாதம் இந்த மசோதா மேல்சபையின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்படும். மேல்சபையில் விவாதம் நடத்தப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டதும், ஜனவரி 31-ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இன்கிலாந்து முறைப்படி வெளியேறும். இதனிடையே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஜனவரி 31-ஆம் தேதிக்குள் இங்கிலாந்து வெளியேறினாலும், முழுமையாக வெளியேறுவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகளாகும் என்பதால், அதற்கான திருத்தங்கள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.