tamilnadu

img

இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக பிரதமர் பதவியில் இருந்து தெரசா மே பதவி விலகியதை அடுத்து இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால், தெரசா மே, தனது பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த மே மாதம் அறிவித்தார். இதனையடுத்து, கடந்த ஜூன் 7-ஆம் தேதி, அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து, இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. 

இங்கிலாந்தில் ஆளும் கட்சியின் தலைவர் பதவியில் இருப்பவரே, இங்கிலாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெராமி ஹண்டுக்கும் இடையே புதிய தலைவருக்கான போட்டி நிலவியது. 

இதை அடுத்து, கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட வாக்குச்சீட்டுகளில் தங்கள் வாக்கினை பதிவு செய்து, தபால் மூலம் கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைத்தனர். நேற்றுடன் வாக்கு பதிவு செய்யும் கால அவகாசம் முடிந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டன. அதன்படி, இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.