tamilnadu

img

வழக்கை திரும்பப் பெறக்கோரி போராட்டம்

சென்னை, ஏப். 30 -பெப்சி நிறுவனம் தொடுத் துள்ள வழக்குகளை திரும்பப் பெற தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தினார்.பெப்சி நிறுவனம் லேஸ் தயாரிப்பதற்கென்று காப்புரிமை பெற்றுள்ள உருளைக் கிழங்கை குஜராத் மாநில விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். எனவே, ஒவ்வொரு விவசாயி யும் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று பெப்சி நிறுவனம் 9 பேர் மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.இந்த அடாவடித்தனமான, விவசாயிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையைக் கண்டித்தும், வழக்கை திரும்பப்பெறக் கோரியும் செவ்வாயன்று (ஏப்.30) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமை தாங்கினார். இப்போராட்டத் தின்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

உலக வர்த்தக அமைப்பு தொடங்கப்பட்ட பிறகு இந்திய விவசாயிகள் மீது போடப் பட்டுள்ள முதல் வழக்கு இது. இந்த வழக்கு தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காமல் இருப்பது கண்டிக்கத் தக்கது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண் டும். வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயிகளுக்கு திருட்டு பட்டம் கட்டிய பெப்சி நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும். பெப்சி நிறுவனத்தை இந்தியாவை விட்டு வெளியேற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு செய்ய வேண்டும். விவசாயிகளை அவமானப்படுத்தியுள்ள பெப்சி நிறுவனம் உற் பத்தி செய்யும் பொருட்களை வணிகர்களும், மக்களும் புறக்கணிக்க வேண்டும். பொய் வழக்கை திரும்பப் பெறும் வரை நாடு முழுவதும் போராட்டம் தொடரும்.உருளை கிழங்குக்கு வந்துள்ள ஆபத்து, தமிழகத்தின் கத்தரி, மிளகாய், நெல் உள்ளிட்ட பயிர்களுக்கும் வரும். ஏதாவது ஒரு செடியின் காப்புரிமையை பெற்றுக் கொண்டு, அதை பயிரிட்டால் வழக்கு போடுவார்கள். பயிர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் 2001ன் அடிப் படையிலேயே இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அச் சட்டத்தின்படி விவசாயிகள் பயிர் உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் உரிமை உள்ளது. விதையைதான் மற்றொருவருக்கு விற்கக்கூடாது.

பாரம்பரியமாக உருளை உற்பத்தி செய்யும் விவசாயிகள், தங்களது விதையை பயன்படுத்தியே பயிரிட்டுள் ளனர். இந்திய விவசாயிகளை அச்சுறுத்தும் வகையிலேயே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் சுயச்சார்பை கேள்விக்குள்ளாக்கும் இந்த அடாவடி நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் தடுக்காவிடில், இந்திய விவசாயிகள் சுயமாக எந்தபயிரையும் பயிரிட முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.இப்போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி. கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.