பொன்னமராவதி, நவ.19- பொன்னமராவதி காவல்நிலையத்தில் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது. கடந்த 15.11.2019 அன்று பொன்னமராவதியில் அரசு மருத்துவ மனையில் புதிதாக கட்டப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம் அமைச்சர் விஜய பாஸ்கரால் தொடங்கி வைக்கப்பட்டது. அன்றைய தினம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் மனுநீதி முகாம் நடைபெற்றது. இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் ரகுபதிக்கு அழைப்பு இல்லை. 17.11.19 அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா அழைப்பிதழில் அவரது பெயர் இல்லை. தொடர்ந்து அரசு விழாக்களில் கலந்து கொள்ள விடாமல் புறக்கணிப்பு செய்யத் தூண்டுதலாக இருந்து வரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்து வரும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீதும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.