tamilnadu

img

"பழைய பஞ்சாங்கத்தையே திரும்பத் திரும்ப கூறும் விஜயபாஸ்கர்"

சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ்  பரவல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர். 
தினம் தோறும் தொற்றுப் பரவலுக்கு ஒவ்வொரு காரணத்தைக் கூறி வந்த தமிழக அரசு, கடந்த மூன்று தினங்களாக சென்னை கோயம்பேடு சந்தையைக் கையைக் காட்டி வருகிறது.இதனால் பெரும்பாலான காய்கறி வணிகர்களுக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 22 மாவட்டங்களில், கொரோனா நோய் தொற்றால் 580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் வியாழன் நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  5 ஆயிரத்து 409 ஆக இருந்தது. 

இந்த நிலையில்,  வெள்ளியன்று மேலும் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்  தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6009-ஆக உயர்ந்திருக்கிறது. வெள்ளியன்று சென்னையைச் சேர்ந்த இருவர், திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவர்உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,16,416 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வெள்ளியன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துஐற அமைச்சர் விஜயபாஸ்கர், தொற்றைத் தடுக்க தமிழக முதல்வர் எடுத்துள்ள நடவடிக்கைகள், ஆய்வகங்கள் ஆகியவற்றை செய்தியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு மீண்டும் நினைவூட்டினார். அறிகுறியில்லாமலே தொற்று பரவுகிறது என்ற கவலையையும் அவர் பகிர்ந்துகொண்டதோடு தொற்று பரவலில் முன்னணியில் உள்ள மகாராஷ்டிரத்தை விட தமிழகத்தில் அதிக சாம்பிள்கள் சோதனை செய்யப்படுவதாகக் கூறினார். வழக்கம் போல் கூறுவதையே கூறினார். இது "பழைய பஞ்சாங்கம் தானே" என்பதை நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது.

ஆனால், தமிழகத்தில்  தொற்று சமூகப்பரவலை அடைந்துவிட்டதா? என்பது குறித்து எதையும் அவர் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து நாம் இரண்டாம் கட்ட நிலையிலேயே உள்ளோம் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.