திண்டுக்கல்:
புதிதாக பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேரும் மாணவ, மாணவியர்களுக்கு தங்கள் சொந்த பணத்திலிருந்து ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கும் நவீன கால்டுவெல்களாக சின்னாளபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.
தமிழில் ஒப்பிலக்கணம் எழுதியவர் ராபர்ட் கால்டுவெல். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் திராவிட மொழிகள் என்று தனது ஆய்வின் மூலம் கண்டறிந்து உலகிற்கு தெரிவித்தவர். அவரும்அவரது மனைவியும் கல்வி பணிசெய்தனர். கால்டுவெல் கல்வி மறுக்கப்பட்ட ஏழை-எளிய மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் துவங்கினார். திருநெல்வேலி மாவட்டம் இளையான்குடி பகுதியில் அப்பள்ளி நிறுவப்பட்டது. ஆடு மேய்த்துக்கொண்டிருந்த கிராமப்புறஏழை, எளிய மக்களின் குழந்தை களுக்கு பொதுக்கல்வியை போதிக்க, அந்த மாணவர்களை ஈர்ப்பதற்காக ஒரு நாளைக்கு பள்ளிக்கு பாடம் படிக்க வந்தால் ஒரு தம்படி (ரூபாய்) தருகிறேன் என்று தனது சொந்த பணத்தை செலவு செய்து, கல்விப்பணி மேற்கொண்டார். அதே போல் அவரது மனைவி பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தினார். 1850-களில் இது போன்ற பொதுக்கல்வியை இருவரும் வழங்கினர். இன்றைக்கு சிபிஎஸ்இ, மெட்ரிகுலேசன் உள்ளிட்ட ஆங்கில வழி தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் என்றபெயரில் கல்விநிலையங்கள் கொள்ளைக் கூடாரங்களாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சின்னாளபட்டி அரசு பள்ளி ஆசிரியர்களின் இந்த பணி குறித்து இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பானுரேகா கூறுகையில், அரசு பள்ளியில் போதிய ஆசிரியர்கள் உள்ளனர். கணிப்பொறி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குடிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட குடிநீர், இலவசமாக பாடப்புத்தகங்கள், சீருடை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. சதுரங்கம், சிலம்பம் உள்ளிட்ட கலைகள், விளையாட்டுக்கள் எந்த கட்டணமுமின்றி இலவசமாக கற்றுத்தரப்படுகின்றன. ஆனால் மாணவர்களை பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் முன்வராத நிலை உள்ளது. இதனை மாற்றுவதற்கான புதிய திட்டம் வகுத்தோம். அதற்காக ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்க முன்வந்தோம். இன்றைக்கு எங்கள் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்த்துள்ளோம்.
இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி இருந்தாலும் எங்கள் பள்ளியை அரசு பள்ளி என்று சொல்வதற்கு பதிலாக மார்க்கெட் ஸ்கூல் என்று தான் பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள். அந்த ஆதங்கம் எங்களுக்கு இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் எங்களது பள்ளிக்கு மேலும்மாணவ, மாணவியர்கள் வருகை தர வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். பேட்டியின் போது உதவி தலைமை ஆசிரியர் ராமசாமி, ஆசிரியர்கள் நாகராணி, சந்திரகலா, சுகந்தி, ஃபுளோரா, மணியம்மாள், ராஜேஸ்வரி, ஞானராஜ் ஆகியோரும் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவிகள் ராஜேஸ்வரி, தனுஜா மற்றும் அவர்களது பெற்றோர்களும் உடனிருந்தனர்.
இந்த செய்தி தொகுப்பு 1 மற்றும் 3 என இரண்டு பிரிவாக உள்ளது.. தோழர்கள் தொடர்ந்து படிக்கும் வசதிக்காக தொடர்ச்சிகள் அனைத்தும் சேர்த்து ஒரே தொகுப்பாக தொகுக்கப்பட்டுள்ளது. ..