tamilnadu

அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும்....

சென்னை;
அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 9 மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும்.  பள்ளி-கல்லூரிகளை திறப்பதற்கு இன்னும் 2 நாட்களே அவகாசம் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 100 நாள் வேலைத் திட்டத்தில் பங்கு பெறுபவர்களை அழைத்து பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் நடத்தப்படுகின்றன.

மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு அனைத்து வசதிகளையும் உரிய முறையில் செய்து கொடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பள்ளி தலைமை ஆசிரியர் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு பஸ் பாஸ் பெறுவதற்கு உரிய விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் மிகக் குறுகிய காலங்களில் மட்டுமே நடத்தும் அவகாசம் இருப்பதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அந்த பாடத்திட்டங் களை ஆசிரியர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது.குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் எவை எவை என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்கு படிப்பு சுமை ஏற்படாது என்ற நிலையை உறுதிப்படுத்த பள்ளிக் கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. முதல் 45 நாட்களுக்கு இணைப்பு பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவ- மாணவிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மாணவ-மாணவிகள் சுகாதார முறையில் பள்ளிகளில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சத்துமாத்திரைகள்
மேலும் வைரஸ் தாக்கத்தை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையிலும் மாணவ- மாணவிகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை மூலம் சத்து மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட உள்ளன.