தருமபுரி, மே 26 - கொரோனா வைரசால் ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்துள்ள தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என வேடமணிந்து, நாடகம் நடித்து நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தமிழ்நாடு தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலநிர்வாகி சின்னச்சாமி கூறியதாவது, தர்மபுரி மாவட்டத்தில் தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புறக்கலைஞர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் உள்ளார்கள். ஆண்டு தோறும் மார்ச் மாதம் தொடங்கி ஜுன்மாதம் வரை கோவில் திருவிழாக்கள் மற்றும் மகாபாரத விழாக்களில் தொடர் நாடகங்கள் நடிப்பதன் மூலம் அதில் வரும் வருமானத்தை வைத்து ஆண்டு முழுவதும் சமாளித்து வந்துள்ளோம். இவ்வாறு திருவிழாக் காலங்களில் கிடைக்கும் வாய்ப்பையே எங்களது வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் நாங்கள் வேலையிழந்து உள்ளோம். கடந்த இரண்டு மாதங்களாக வருவாய் இன்றி எங்கள் குடும்பம் பட்டினி கிடக்கும் நிலையில் உள்ளது. ரேசன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியதைத் தவிர வேறு எந்த நிவாரணமும் அரசு எங்களுக்கு செய்யவில்லை. கலைப் பண்பாட்டுத்துறையின் மூலமாக அடையாள அட்டை பெற்றிருந்த போதிலும் எங்களுக்கு அரசு நிவாரணம் கிடைக்கவில்லை. நலவாரியப் பதிவு இல்லாத முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளதைப் போல எங்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் கூட்டமாகக் கூடதடை நீடிக்கிறது. திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள் நடத்திட அனுமதிக்க ஓராண்டு காலமாவது ஆகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதுவரை வேலையிழந்த அனைத்து கலைஞர்களின் குடும்பங்களுக்கும் தமிழக அரசு மாதந்தோறும் 7500 ரூபாய் நிவாரணம் வழங்குவதோடு உணவுப்பொருட்களையும் இலவசமாக வழங்க வேண்டும். மேலும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் கலைப் பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் ஆகியோரிடம் சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். ஆனால்தற்போது வரை அதற்கான எந்ததவொரு தீர்வும் கிடைக்கவில்லை. எனவே, மேற்கண்ட எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்த்து நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கலைஞர்கள் வேடமணிந்து இங்கு நாடகம் நடித்து கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கூறினார். இதில் சங்க நிர்வாகிகள் வேலன், கணேசன், அண்ணாதுரை மற்றும் சாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். சேலம்இதேபோல், சேலம் மாவட்டம் சங்ககிரியில் தெருக்கூத்துக் கலைஞர்கள் கொரோனா நிவாரணம்வழங்க வலியுறுத்தி வேடமணிந்து, நடனம் ஆடி கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளார்.