tamilnadu

img

இந்நாள்... இதற்கு முன்னால்... ஜூலை 12

1804 - அமெரிக்காவை நிறுவிய தந்தைகளுள் ஒருவரும், முதல் கருவூலச் செயலாளருமான(நிதியமைச்சர்) அலெக்சாண்டர் ஹாமில்ட்டன், அமெரிக்காவின் மூன்றாவது துணைக் குடியரசுத்தலைவரான ஆரோன் பர் ஜூனியர் உடனான 'ஒண்டிக்கு ஒண்டி(ட்யூயல்)' சண்டையில், துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்தார்! இரண்டு தனி மனிதர்களுக்கிடையே 'ஒற்றைக்கு ஒற்றை' சண்டையிடுதல் உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்பட்டுள்ளது.

அது மற்போராகவோ, சமமான ஆயுதங்களுடனோ, ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும். இதற்கான விதிகள், கோட் ட்யூயல்லோ என்று பண்டைய ரோமப் பேரரசில் அழைக்கப்பட்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட பகுதிகளிலும், ஒரு போரின் முடிவை இரு அரசர்கள் மட்டும் மோதித் தீர்மானிப்பது தொடங்கி, பிணக்குகளைத் தீர்ப்பது, யார் பெரியவர் என்று முடிவு செய்வது முதலானவற்றிற்கு இத்தகைய சண்டைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. கைத்துப்பாக்கிகளின் வரவுக்குப்பின், ஐரோப்பாவில் இச்சண்டைகளில் வாட்களுக்குப் பதிலாக அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. 18ஆம் நூற்றாண்டுவாக்கில், இது பல இடங்களிலும் தடை செய்யப்பட்டாலும், முடிவுக்கு வரவில்லை. அமெரிக்காவிலுமே இது தடைசெய்யப்பட்டிருந்தாலும், தங்களுக்கிடையேயான பிணக்கை(கணக்கை!) தீர்த்துக்கொள்ள இருவரும் இதைத் தேர்ந்தெடுத்தனர் என்பது மட்டுமின்றி, அதற்கு முன்னரும் இருவருமே பலருடன் இவ்வாறான சண்டைகளைச் செய்திருந்தனர்.

1800இல் நடைபெற்ற அமெரிக்கக் குடியரசுத்தலைவர் தேர்தலில், தாமஸ் ஜெஃபர்சன் பெரும்பான்மை பெற்றிருந்தாலும், 1801 ஃபிப்ரவரியில் நடைபெற்ற வாக்காளர் குழு(எலெக்டோரல் காலேஜ்) வாக்குப்பதிவில், (ஒரே கட்சியைச் சேர்ந்த!) ஜெஃபர்சனும், பர்-ரும் சமமான வாக்குகளைப் பெற்றிருந்தனர். முடிவை பிரதிநிதிகள் அவைதான் தீர்மானிக்கவேண்டிய நிலையில், ஹாமில்ட்டனின் முயற்சிகளால்(சூழ்ச்சிகளால்!), கூடுதல் வாக்குப்பெற்று ஜெஃபர்சன் குடியரசுத்தலைவராகவும், பர் துணைக்குடியரசுத்தலைவராகவும் ஆயினர். 1804 தேர்தலில் துணைக்குடியரசுத்தலைவர் இடத்திற்குப் போட்டியிட பர்-ரை ஜெஃபர்சன் அனுமதிக்கவில்லை. இவற்றால் ஹாமில்ட்டன்மீது கடுமையான வருத்தமிருந்த நிலையில்தான், இருவரும் மோதிக்கொண்டனர். அமெரிக்க வரலாற்றின் பெரும்புகழ்பெற்ற இச்சண்டையில், ஹாமில்ட்டன் இறந்ததால் பர்மீது கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டாலும், தண்டனையளிக்கப்படவில்லை. ஆனாலும் அவரது, அரசியல் வாழ்க்கை அத்துடன் முடிவடைந்தது. அமெரிக்காவின் முதல் அரசியல் கட்சியான ஃபெடரலிஸ்ட் கட்சியைத் தொடங்கி, அமெரிக்க அரசியலின் அடித்தளத்தையும், முதல் கருவூலச் செயலாளராக அமெரிக்க நிதித்துறையின் அடித்தளத்துடன், முதல் மத்திய வங்கிகளாகச் செயல்பட்ட இரு வங்கிகளையும், கடலோரக் காவற்படையையும், நியூயார்க் போஸ்ட் செய்தித்தாளையும் தொடங்கியவரான ஹாமில்ட்டனும் இறந்துபோனார்!

===அறிவுக்கடல்===