ஆக்ரா:
பிற மாவட்டங்களுக்கு கொரோனாவை பரப்பியதாக உத்தரப்பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றின் மீது காவல்துறை வழக்குத் தொடர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் பரஸ் என்னும் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. உள்ளூர் பெண் ஒருவர் இங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுராவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கபட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பரஸ் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் விபரங்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கபட்டது.
ஆனால் விசாரணையில் அம்மருத்துவமனை நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டியதும், பாதிக்கப்பட்ட நோயாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிய அனுமதித்ததும் தெரியவந்தது இதையடுத்து பிற மாவட்டங்களுக்கு நோய் பரவ காரணமாக இருந்ததாகக் கூறி, பரஸ் தனியார் மருத்துவமனை கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ள இடமாக அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 7-ஆம் தேதி மூடப்பட்டது. அத்துடன் 188,269,270 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 271 ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த மருத்துவமனை மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.