tamilnadu

img

உலகக் கோப்பை கிரிக்கெட் :நினைவில் நின்றவை!

1975 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற பதினோரு தொடரின் சுவாரஸ்ய தொகுப்பு;

இரு அணி ஒரு வீரர்!

தென்னாப்பிரிக்காவில் பிறந்தவரான கெப்ளர் வெசல்ஸ், 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்காக ஆடிய அவர், 1991-ல் மீண்டும் தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பினார். அந்த அணிக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியதைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக விளையாடினார். 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சொந்த நாட்டிற்காக ஆடிய மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் கம்மின்ஸ், பின்னர் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் கனடாவுக்கு குடிபெயர்ந்து 2007-ல் அந்த அணிக்காக விளையாடினார்.அயர்லாந்தில் பிறந்த கிறிஸ்டோபர் எட்மண்ட் ஜோய்ஸ் 2001-ல் தாய் நாட்டிற்காகவும் பின்னர் இங்கிலாந்து அணிக்காகவும் விளையாடினார்.  மீண்டும் சொந்த அணிக்கே திரும்பிவிட்டார். நடப்பு உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்கும் இயோன் ஜோசப் மோர்கனும் அயர்லாந்தை சேர்ந்தவரே 2007ஆம் ஆண்டில் தாய்நாட்டு அணிக்காக விளையாடினார்.

அபூர்வம்!

கிரிக்கெட் ஆடத் துவங்கிய காலத்திலிருந்து பாரம்பரியமாக தேசிய அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் குடும்பங்கள் ஏராளம். அதிலும் உலக கோப்பையில் ஒரே அணியில் சகோதரர்கள் இடம்பிடித்து விளையாடியது அரிய நிகழ்வாகும்.இரட்டைச் சகோதரர்கள் அதிகபட்சமாக இடம் பிடித்த ஒரே அணி கென்யா. ஸ்டிவ்-டேவிட் டிக்கோலோ, தாமஸ்- கென்னடி ஒடயோ, டேவிஸ் ஒபுயா-காலின்ஸ் ஒபுயா, மாரிஸ் ஒடம்பே- டிட்டோ ஒடம்பே, மார்ட்டின்- டோனி, சுஜி சகோதரர்கள் ஒரே தொடரில் விளையாடினர்.ஆரம்பக் காலத்தில் கிரேக் சேப்பல், இயன் சேப்பல் சகோதரர்கள் ஆஸ்திரேலியா அணியில் விளையாடினர். அந்த வரிசையில் ஸ்டீவ்வாவ்-மார்க் வாவ், பிரட் லீ-ஷான் லீ, டேவிட் ஹஸி- மைக்கேல் ஹஸி சகோதரர்களும் இடம்பெற்றனர்.நியூசிலாந்தின் மார்ட்டின் குரோவ்-ஜெப் குரோவ், ரிச்சர்ட்ஸ்- டேவிட் ஹாட்லி, பிராடன்-நாதன் மெக்கலம் சகோதரர்களும், ஜிம்பாப்வே அணியின் ஆன்டி பிளவர்- கிராண்ட் பிளவர், பாகிஸ்தானின் கம்ரான் அக்மல்- உமர் அக்மல், மேற்கிந்தியத்தீவுகள் அணி டுவேன்- டேரன் பிராவோ, அயர்லாந்தில் கெவின் ஓ பிரையன்- பிரெண்டன் ஓ பிரையன் சகோதரர்களும் விளையாடினர்.

“4 விக்கெட் 4 பந்து”

இந்திய பந்து வீச்சாளர் சேத்தன் சர்மா என்றதும் ரசிகர்களின் நினைவுக்கு வருவது 1986- ல் நடந்த சார்ஜா கோப்பையே. இறுதி ஆட்டத்தின் கடைசிப் பந்தில் பாகிஸ்தான் வீரர் மியாண்டட் சிக்ஸர் அடித்து கோப்பையை பறித்தது இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா வடுவாக மாறி விட்டது. அந்த அவப் பெயரை துடைத்தெறிய 1987ஆம் ஆண்டு நாக்பூரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டி உதவியது. அடுத்தடுத்த பந்துகளில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை சாய்த்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த முதல் வீரரானார். இந்த ஐபிஎல் தொடரின் கதாநாயகன் வேகப்பந்து அசுரன் லசித் மலிங்கா உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டை வீழ்த்தி சரித்திரத்தை மாற்றினார்.

நிஜமல்ல!

முதல் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த கரீபியன் தீவில் 2007ஆம் ஆண்டுதான் முதல் முறையாக உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது. பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் தென்னாப்பிரிக்காவின் பாப் உல்மர் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை விசாரித்த காவல்துறையினர் இது கொலையல்ல. இயற்கையான மரணம் என ஒரு வழியாக முடித்து வைத்தனர். இதிலிருந்து மீள முடியாத பாகிஸ்தான் அணி துவக்கச் சுற்றோடு நடையைக் கட்டியது.

பெருந்தன்மை!

1988ஆம் ஆண்டு நடந்த நான்காவது உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு செல்லும் அணி எது என்பதில் பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் மட்டையாளர்கள் மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சாளர்கள் வால்ஷ், பேட்டர்சன் கூட்டணியின் அசுர வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 20 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடினர். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்பதால் டென்சன் உச்சத்தை எட்டியது. ரன்னராக இருந்த ஜாபர், பந்தை வீசுவதற்குள் அவசரப்பட்டு கிரிஸை விட்டு ஓடிவிட்டார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ராஜஸ்தான் வீரர் பட்லரை பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் அவுட்டாக்கி வெற்றியை பறித்ததைப் போன்று அன்றைக்கு வால்ஷ் செய்யவில்லை; பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

சோகம்...

 11 உலகக் கோப்பையிலும் பங்கேற்ற கிரிக்கெட் விளையாட்டின் தாயகமான இங்கிலாந்து முதல் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே சொந்த மண்ணில் களமிறங்கியபோதும் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் சரணடைந்தது. அடுத்த முறை ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது கோப்பையை பறிகொடுத்தது. பாகிஸ்தானுடன் நடந்த இறுதி ஆட்டத்திலும் இங்கிலாந்தின் சோகம் தொடர்ந்தது. இதுவே இங்கிலாந்து அணி கடைசியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதாகும். அதன் பிறகு ஒரு முறை கூட இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.

முதலும் கடைசியும்!

2015 ஆம் ஆண்டு நான்காவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. முதல் நாள் பெய்த மழை மழையால் ஏழு ஓவர் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க பேட்டிங்கை தேர்வு செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்களை குவித்தது. அடுத்து, நியூசிலாந்து களமிறங்கியபோது மீண்டும் மழை கொட்டியதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 298 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கேப்டன் ஏபி.டி வில்லியர்ஸ் வெற்றிக்காக கடுமையாக போராடியது வீண் போனது. ஒரு பந்து மீதமிருக்கையில் நியூசிலாந்து அணி சாதித்து காட்டியது. உலக கிரிக்கெட் வரலாற் றில் இப்படி ஒரு வினோத சம்பவம் நடந்தது இதுவே முதலும் கடைசியுமாகும்.

‘த்ரில்’

இனவெறிக் கொள்கையால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்ட தென்னாப்பிரிக்க அணி 20 ஆண்டுகளுக்கு பிறகு, ஐந்தாவது கோப்பையில் (1992) கெப்ளர் வெசல்ஸ் தலைமையில் அடியெடுத்து வைத்தது. முதல் முறையே அசத்தலாக அரையிறுதிக்குள் நுழைந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இங்கிலாந்துடன் நடத்திய பலப் பரீட்சையில் 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நெருங்கிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்காவுக்கு 42 வது ஓவரில் மழை ‘வில்லனாக’ மாறியது. சுமார் அரை மணி நேரம் தடைபட்ட ஆட்டத்தால் 13 பந்துகளில் 22 ரன்கள் என இலக்கு மாற்றப்பட்டது. 4 விக்கெட் கைவசம் இருந்த நிலையில் திரும்பவும் கொட்டித் தீர்த்த மழையால் ஆட்டத்தை தொடர முடியாமல் டக்வொர்த் லூயிஸ்(டி/எல்) முறைப்படி ஒரு பந்தில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என நடுவர்கள் அறிவித்ததும் மில்லியன் ரசிகர்களின் இதயமும் துடியாய் துடித்தது. பிறகு என்ன? தென்னாப் பிரிக்காவை வீழ்த்தியது மழை. 1999 ஆம் ஆண்டின் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 12 பந்துகளில் 18 ரன் எடுக்க வேண்டிய நிலையில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் வீசிய 49வது ஓவரில் ஒரு ரன் சேர்த்த நிலையில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அந்த முறை தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்ற லான்ஸ் குளூஸ்னர் மலைபோல் நின்று சிக்சர் அடிக்க ஆட்டம் உச்சத்தை எட்டியது. கடைசி 6 பந்தில் 9 ரன்கள் தேவை. கையில் இருப்பதோ ஒரு விக்கெட். பிளமிங் வீசிய அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் எல்லைக்கோட்டுக்கு விரட்டினார் குளூஸ்னர். நிலைமை தலை கீழானது. 4 பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. அந்த ரன்னுக்காக குளூஸ்னர் முயற்சிக்க, எதிர்முனையிலிருந்த ஆலன் டொனால்ட் பதற்றத்தில் திகைத்து நிற்க ஆஸ்திரேலியா வீரர்கள் சாதுரியமாக ரன் அவுட்டாக்கினர். இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால் லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் பெற்ற இந்த ‘த்ரில்’ வெற்றியும் மறக்க முடியாத நினைவுகளாகும்.

‘673’

1992 ஆம் ஆண்டில் அறிமுகமான தொடர் நாயகன் விருதை நியூசிலாந்து கேப்டன் மார்ட்டின் குரோவ் தட்டிச் சென்றார். ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்குள் செல்ல முடியாத தென்னாப்பிரிக்க அணியில் 673 ரன்கள் குவித்த சிறந்த ஆல் ரவுண்டரான லான்ஸ் குளூஸ்னருக்கு தொடர் நாயகன் விருது கிடைத்ததே ஆறுதலாக அமைந்தது.

‘417’

கத்துக்குட்டி நாடான பெர்முடாவை புரட்டி எடுத்து 413 ரன்கள் குவித்த இந்திய அணியின் சாதனையை ஆப்கானிஸ்தானுடனான ஆட்டத்தில் 417 ரன்களை குவித்து முதலிடத்தை பறித்தது ஆஸ்திரேலியா அணி.

‘329’

பல ஜாம்பவான்களை உருவாக்கிய இங்கிலாந்து அணியை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பந்தாடிய சின்னஞ்சிறு நாடான அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் மிக குறைந்த பந்தில் (63) 113 ரன்கள் விளாசி 329 ரன்களை சேஸிங் செய்து வெற்றி பெற்றதை உலக சாம்பியன் பட்டம் வென்ற அணிகளால்கூட இன்றளவும் முறியடிக்க முடியவில்லை.

‘36’

இலங்கையின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 2003 ஆம் ஆண்டில் கனடா அணி 36 ரன்களில் சுருண்டதே மிகக் குறைந்தபட்ச ஸ்கோராகும். மேற்கிந்தியத் தீவுகளிடம் இலங்கை அணி 56 ரன்களிலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 74 ரன்களிலும் இங்கிலாந்திடம் அயர்லாந்து 77 ரன்களிலும் சரிந்திருக்கிறது. ஐந்து முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி இந்திய அணியிடம் 129 ரன்களிலும் இரண்டு முறை சாம்பியனான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 125 ரன்களில் சுருண்டது.

‘10’

முதல் உலக கோப்பை தொடரில் பங்கேற்ற கிழக்கு ஆப்பிரிக்கா அதனைத் தொடர்ந்து பங்கேற்ற ஜிம்பாப்வே, கென்யா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகளை இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளன.

‘0’

உலகக் கோப்பையில் 14 போட்டிகளில் விளையாடிய ஸ்காட்லாந்து, 6 ஆட்டங்களில் ஆடிய நமீபியா, 3 ஆட்டங்களில் பங்கேற்றிருக்கும் கிழக்கு ஆப்பிரிக்கா, பெர்முடா ஆகிய அணிகள் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை. 57 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் ஜிம்பாப்வே அணி அதிகபட்சமாக 42 போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது.