மும்பை
இந்திய கிரிக்கெட் மைதானங்களில் தனிச்சிறப்புடைய வான்கடே கிரிக்கெட் மைதானம் மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் உள்ளது. 43,977.93 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இந்த மைதானத்தில் 45,000 பேர் போ ட்டியை ரசிக்கலாம்.
மகாராஷ்டிரா அரசுக்கு சொந்தமான இந்த மைதானத்தை 50 வருடத்திற்கு முன்பு மும்பை கிரிக்கெட் சங்கம் குத்தகைக்கு வாங்கியது.வருடாந்திர குத்தகை மூலம் மகாராஷ்டிரா அரசுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் குறிப்பிட்ட தொகையை ஆண்டுதோறும் செலுத்தி வந்தது.
2017-ஆம் ஆண்டுக்கான குத்தகை கடந்த வருடம் (2018) பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைந்த நிலையில்,மும்பை கிரிக்கெட் சங்கம் இன்னும் குத்தகையைப் புதுப்பிக்கவில்லை.மேலும் மகாராஷ்டிரா அரசுக்கு நிலுவைத் தொகையாக 120 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.
இந்நிலையில், மும்பை நகர ஆட்சியர் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.அதில்,"120 கோடி ரூபாய் பாக்கி பணத்தை முதலில் செலுத்துங்கள்.அதன்பின் குத்தகையைப் புதுப்பியுங்கள் இல்லாவிட்டால் மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை நகர ஆட்சியர் பிடிஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,"வருமானத்தைப் பார்க்கும் பொழுது 120 கோடி ரூபாய் சிறிய தொகை தான்.பாக்கி தொகை குறித்த பிரச்சனை இருக்கும்போதே, மும்பை கிரிக்கெட் சங்கம் குத்தகைக்கு விண்ணப்பித்துள்ளது.வருமானத்தைப் பார்க்கும் பொழுது 120 கோடி ரூபாய் சிறிய தொகைதான்.மும்பை கிரிக்கெட் சங்கம் நிலுவைத் தொகை செலுத்தும் வரை இடைக்கால கூட்டமோ அல்லது கால நீட்டிப்போ கிடையாது. மே 3-ஆம் தேதி கூட்டத்திற்குப் பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்" என்று அதிரடியாகக் கூறியுள்ளார்.
இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் கிரிக்கெட் சங்கங்களில் முதன்மையானது மும்பை கிரிக்கெட் சங்கம்.ஐபில் மற்றும் சர்வதேச தொடர்களால் ஆண்டுதோறும் நல்ல வருவாய் ஈட்டும் மும்பை கிரிக்கெட் சங்கம் நிலுவைத் தொகை வைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.