இனி மூன்றாம் நடுவர் தான் அறிவிப்பார்
கிரிக்கெட் போட்டியின் சுவா ரஸ்யத்தைக் குறைப்பது முதலில் மழை என்றால் அடுத்தது நோபால் தான். பந்துவீச்சாளர் போப்பிங் எல்லைக்கோட்டில் காலை அழுத்தி வைத்துத்தான் பந்தை வீச வேண்டும். இந்த செயல்முறைகளைப் பின்பற்றாத பந்துவீச்சு நோபால் (செல்லாத) என அறிவிக்கப்படும். நோபாலுக்கு ஒரு ரன்னும் அடுத்து பிரீ ஹிட் (FREE HIT) எனப்படும் இலவச பந்து வீசப்படும். இந்த பிரீஹிட் பந்துவீச்சில் சிக்ஸர் பவுண்டரி எளிதாக விளாசலாம். கேட்ச், போல்ட், எல்பி டபிள்யு என எவ்வித ஆட்டமிழப்பு முறையும் கிடையாது. ஆனால் ஸ்டெம்பிங், ரன் அவுட் முறை உண்டு என்றாலும் இது பேட்ஸ்மேன்களுக்கு அவ்வளவாகச் சிக்கலை ஏற்படுத்தாது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் இந்த நோபால் முறையில் நடுவர்கள் அடிக்கடி தவறு இழைக்கின்றனர் என சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு (ஐசிசி) அடிக்கடி புகார் வருகிறது. இந்த விதியில் மாற்றம் கொண்டு வர ஐசிசி இரண்டு ஆண்டுகளாகத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் மூன்றாம் நடுவர் தான் இனி நோபால் விதியை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்த 6 மாதங்களில் இதுதொடர்பான ஒத்திகையைப் பார்க்கவுள்ள ஐசிசி இந்த புதிய திட்டத்தில் திருப்தி ஏற்பட்டால் விரை வில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போப்பிங் என்றால் என்ன?
பந்துவீசப்படும் ஸ்டெம்ப் பகுதியில் இரண்டு விதமான கிரீஸ் (எல்லைக்கோடு) உள்ளன. முதலில் இருப்பது பௌலிங் கிரீஸ், அடுத்து போப்பிங் கிரீஸ். ஓடி எடுக்க வேண்டிய ரன்னுக்கு இந்த கிரீஸ் முக்கியம் என்றாலும், பந்துவீச இதுதான் மிகமுக்கியம் ஆகும். இதனை மிதித்தால் தான் அது சரியான பந்துவீச்சு. மிதிக்கவில்லையென்றால் அது நோபாலாக அறிவிக்கப்பட்டு பேட்ஸ்மேன்களுக்கு வேண்டிய கட்டாயம் என்பதால் இந்த கிரீஸை பந்துவீச்சாளர்கள் கண்கொத்தி பாம்பைப் போல அடிக்கடி கவனிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.