கிரிக்கெட் உலகில் உலகக்கோப்பை போன்ற முக்கியமான ஆட்டங்கள் இருந்தாலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்குத் தனி மவுசு உள்ளது. இதற்குக் காரணம் இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் மற்றும் எல்லை பிரச்சனைகளை கிரிக்கெட்டில் திணிப்பதால் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டங்கள் உலகளவில் சிறப்பு வாய்ந்த ஆட்டமாக கருதப்படுகிறது. வரலாற்றுத் தொடர்புடைய இந்த விளையாட்டு நிகழ்வு பாகிஸ்தான் மண்ணில் நிகழும் தீவிரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இந்தியாவில் நிகழும் தாக்குதல் பிரச்சனை போன்ற காரணங்களுக்காக இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் 7 ஆண்டுகளாக இருதரப்பு தொடரில் பங்கேற்பதைத் தவிர்த்து வருகின்றன. எனினும் உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடரை நடத்தப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு வகையில் முயன்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசின் உத்தரவைக் காரணமாகக் காட்டி பாகிஸ்தான் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. கடுப்படைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-க்கு சென்று இந்திய கிரிக்கெட் வாரியம் மீது புகார் அளித்து இழப்பீடு கோரியது. ஆனால் ஐசிசி இதனைக் கண்டுகொள்ளவில்லை. தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளை தங்கள் மண்ணில் விளையாட வைத்து எங்கள் நாட்டில் பாதுகாப்பு நன்றாக உள்ளது என நிரூபித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடியிடம் இணையதள செய்தி நிறுவனம்,”இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் மீண்டும் எப்போது நடக்கும்” எனக் கேள்வி எழுப்பியது. இதற்குப் பதிலளித்த அப்ரிடி,”மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இருநாட்டு கிரிக்கெட் தொடர் குறித்து இந்தியாவிடம் சாதகமான பதில் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. மோடி சிந்திப்பதை அனைவரும் அறிந்துள்ளோம். அவரது சிந்தனை பெரும்பாலும் எதிர்மறை விஷயங்களைச் சார்ந்தே இருக்கிறது. ஒரே ஒரு நபரால் (மோடி) இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு சிதைக்கப்பட்டுள்ளது. எல்லையில் உள்ள இந்திய மக்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் மக்கள் இந்தியாவிற்கும் பயணிக்க விரும்புகின்றனர். ஆனால் இதுகுறித்து மோடி என்ன விரும்புகிறார் அவரது திட்டம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”என இந்தியப் பிரதமர் மோடியை கடுமையாகச் சாடினார். அப்ரிடியின் இந்த அதிரடி பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், மீம்ஸ் மூலம் இருநாட்டு கிரிக்கெட் தொடர் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.