கோவையில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் கோவையில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள மாபெரும் நூலகம் - அறிவியல் மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர், நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு நூலகத்திற்கு தந்தை பெரியார் பெயர் வைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நூலகம் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, கோவையில் தங்க நகை தயாரிப்பாளர்களுக்கு ரூ,126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் வளாகம் அமைத்து தரப்படம், 17 ஏக்கரில் மேலும் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும், விளை நிலங்களில் யானை புகாதவாறு நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வேலிகள் அமைத்துத்தரப்படும், யானை புகாத நவீன பாதுகாப்பு வேலிகளுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் ரூ.7 கோடியில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், கோவையில் ரூ.1,848 கோடி மதிப்பில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கிரிக்கெட் திடல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.