மேட்டுப்பாளையம், மே 5-
“ஹாட் ஸ்பாட்” என்றழைக்கபட்ட மேட்டுப்பாளையம் நகரம் தற்போது– ஒருங்கிணைந்த முயற்சியால் நோய் தொற்றில்லா பகுதியாக மாறியுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவத் துவங்கிய கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மட்டும் மேட்டுப்பாளையத்தில் 46 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கொரோனாவின் ஹாட் ஸ்பாட்டாக மாறிய மேட்டுப்பாளையம் பகுதி தனி கவனம் எடுத்து கண்காணிக்கப்பட்டது. மேலும், மேட்டுப்பாளையம் பகுதி முழுவதும் தீயணைப்புத்துறை மற்றும் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகள் தவிர அனைத்து வகை நடமாட்டமும் முற்றிலுமாக முடக்கப்பட்டது. நியாய விலைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தனி மனித இடைவெளி கட்டாயமாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அரசு அதிகாரிகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கினர்.
இதேபோல், முழு முடக்கதால் உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் தினசரி வழங்கியபடி மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர். மேலும், அவசர கால ரத்த சேமிப்பு குறைந்து விட்ட இக்கட்டான சூழலில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பலரும் ஆர்வமுடன் ரத்தம் வழங்கினர்.
இந்நிலையில், யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படாத சூழலில் கோவையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் படிப்படியாக பூரண குணமடைந்து வீடு திரும்ப துவங்கினர். மேட்டுப்பாளையத்தில் இருந்து கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட அனைவரும் நலமடைந்து இல்லம் திரும்பியதாலும் கடந்த இருபத்தியொரு நாட்களாக யாருக்கும் புதிதாக நோய் தொற்று கண்டறியப்படாதாலும் இப்பகுதி கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது. இது குறித்து மேட்டுப்பாளையம் அரசு பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சேரலாதன் கூறுகையில், “ஒருங்கிணைந்த செயல் திட்டதால் ஒரு ஹாட் ஸ்பாட் கொரோனா பாதிப்பில்லா பகுதியாக மாறியுள்ளது” என்றார்.