tamilnadu

img

கோவையில் சிஜிஎச்எஸ் மருத்துவ மையம் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல்.... பி.ஆர்.நடராஜன் எம்.பி., யின் தொடர் முயற்சிக்கு வெற்றி....

கோவை:
மேற்கு மண்டலத்தில் உள்ள ஒன்றியஅரசு ஊழியர்கள், ஒன்றிய அரசின்ஓய்வூதியம் பெறுபவர்கள் அவர்களின் குடும்பத்தினர் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மருத்துவ வசதியினை பெறுவதற்கு வசதியாக கோவையில் சிஜிஎச்எஸ் மருத்துவ மையத்தை அமைக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன் பேரில் கோவையில் சிஜிஎச்எஸ் மருத்துவ மையம் அமைக்கஒன்றிய சுகாதாரத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு இஎஸ்ஐ மருத்துவமனை இயங்குவது போல், ராணுவத்தினர், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை செலுத்தி இலவசமாக சிகிச்சை பெருவதற்கு சிஜிஎச்எஸ் (சென்ட்ரல் கவர்மென்ட் ஹெல்த் ஸ்கீம்)  மருத்துவமனைகள் நாடு முழுவதும் பல்வேறுஇடங்களில் உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனை களோடு ஒப்பந்தம் ஏற்படுத்தி அறுவைசிகிச்சைகளும் மேற்கொள்ளப்படு கிறது. இதற்கான செலவுகளை முழுவதும் சிஜிஎச்எஸ் திட்டத்தில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு செலுத்தப்படுகிறது. 

இந்த சிஜிஎச்எஸ் மருத்துவமனை சேவை தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே  உள்ளது. இதனால் இந்த மருத்துவ வசதிகளை பெறுபவர்கள் சென்னைக்கு மட்டுமே செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே மேற்கு மண்டலத்தின் மையமான பகுதியாக கோவை மாவட்டம் உள்ளதால் சிஜிஎச்எஸ் மருத்துவ மையத்தை கோவையில் துவக்க வேண்டும். இதற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்தி இருந்தார்.
இதனையடுத்து கோவையில் சிஜிஎச்எஸ் (சென்ட்ரல் கவர்மென்ட் ஹெல்த் ஸ்கீம்) மருத்துவ மையம் அமைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், பாலக்காடு ஆகிய எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்தை பெற்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி மீண்டும் கடிதம் எழுதியிருந்தார்.இந்த தொடர்ச்சியான வலியுறுத்துதலையடுத்து தற்போது ஒன்றிய சுகாதாரத்துறை நாடு முழுவதும் கோவை உள்ளிட்ட  16 இடங்களில் சிஜிஎச்எஸ் மருத்துவ மையங்களை அமைக்க ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த மருத்துவ மையத்தில் ஒரு மருத்துவ அதிகாரி, ஒரு மருந்தாளுநர், ஒரு அலுவலக பணியாளர், ஒரு செவிலியர்கள் ஆகியோர் நியமிக்கப்படுவர். நிதி ஒதுக்கீடு 2020-2021 பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம்பேர் பயனடைவர்
இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் கூறுகையில், மேற்கு மண்டலத்தை மையப்படுத்தி கோவை மாவட்டத்தில் சிஜிஎச்எஸ் மருத்துவ மையம் அமைக்கப்படும் என ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ சேவையால் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ராணுவத்தினர், ஒன்றிய அரசு ஊழியர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வசதியினை பெற முடியும். தமிழ்நாட்டில்சென்னையில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது கோவைக்கு இந்த  மருத்துவ சேவை வழங்கப்படுவதால் அலைச்சல், காலவிரயம் ஆகியவை தவிர்க்கப்படும். மேலும், பெரிய அறுவை சிகிச்சை செய்வதற்கு பல தனியார் மருத்துவமனைகளோடு ஒப்பந்தம்ஏற்படும். மருத்துவ சேவைகள் விரிவடையும். இதனால் கோவையை மையப்படுத்திய எட்டு மாவட்டங்களில் உள்ள பயனாளிகள் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடை வார்கள் என்றார்.தற்போது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது கோவை  இஎஸ்ஐ மருத்துவமனையை தரம் உயர்த்தி மருத்துவக் கல்லூரியாக உருவாக பெரும் முயற்சி மேற்கொண்டு அதனை நிறைவேற்றியவர் பி.ஆர்.நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.