புதுதில்லி:
உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தற்போது 24 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் யு.யு.லலீத், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட கொலீஜியம் அமைப்பானது 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகளை உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஷ்வரி, தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோரின் பெயர்களும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து நேரடி நியமன அடிப்படையில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அரசு கூடுதல் வழக்கறிஞருமான பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.இந்த பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி ஒப்புதலுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.