சாதி கேட்காதீர்கள் சரி என்று சொல்லுங்கள்
திருநெல்வேலி, செப்.11- நடக்கவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தில் ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும், இந்த வாய்ப்பை விட்டால் மற்றொரு வாய்ப்பு இந்த அரசுக்கு கிடைக்காது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்திக் கூறினார். திருநெல்வேலியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் தலைமையில், ஆண வப் படுகொலைகளை தடுக்க சிறப்புச்சட்டம் இயற்றக்கோரி செப்டம்பர் 10 புதனன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பெ.சண்முகம் மேலும் பேசியதாவது: தமிழகத்தையே உலுக்கிய கவின் செல்வ கணேஷ் படுகொலை ஜுலை 27 அன்று நடந்தது. பட்டியல் சாதி குடும்பத்தின் முதல் தலைமுறை மென்பொறியாளரை கொன்றது அந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் மனித வளத்துக்கு ஏற்பட்ட இழப்பாகும். இதுபோன்ற பல படுகொலைகள், சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொண்டார்கள் என்பதற்காக நடந்துள்ளன. அத்தகைய படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியிருக் கிறது. தனிச்சட்டம் கோருவது ஏன்? நாங்கள் தனிச்சட்டம் கோருவது பட்டியல் சாதியினருக்காக என்று சிலர் கருதுகிறார்கள். அது தவறு. பட்டியல் சாதிகளுக்கு இடையிலும் ஆணவக் கொலைகள் நடக்கின்றன. பட்டியல் சாதி அல்லாதோருக்கு இடையிலும் ஆணவக் கொலைகள் நடக்கின்றன. சாதி மறுப்பு திரு மணம் செய்தால்தான் இதுபோன்ற கொலை கள் நடைபெறுகிறது என்பது உண்மை அல்ல. எந்த சாதியாக இருந்தாலும் காத லித்தால் - திருமணம் செய்து கொண்டால் கொல்லப்படுகிறார்கள். இப்படி கூறுவது குறிப்பிட்ட ஒரு சாதிக்கு ஆதரவானது அல்ல. இது ஒரு சமூகக் கொடுமை. மாபெரும் குற்றம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்து தப்பித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்கிறோம். மகாகவி பாரதி சொன்னதைச் செய்கிறோம் இந்தியாவிலேயே முதல்முறையாக 2009 ஆம் ஆண்டு இந்திய நாடாளு மன்றத்தில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச் சட்டம் வேண்டும் என்று தீர்மானம் முன்மொழிந்து பேசியவர் தோழர் பிருந்தா காரத். இரண்டாவதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனிச்சட்டத்துக்கான மசோதாவை முன்மொழிந்தவர் சிபிஎம் தலைவர் அ.சவுந்தரராசன். எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர்நிறை என்பதை தமிழகத்தில் முழங்கியவர் மகாகவி பாரதி. பாரதியை படியுங்கள், பாரதி யின் கவிதைகளை படியுங்கள், பாரதியின் வழியில் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று நூறாண்டுகளுக்கு முன்பாக சொல்வதற்கு எவ்வளவு தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்திருக்க வேண்டும். பாரதி சொன்ன தைத்தான் நாங்கள் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறோம். சிபிஎம் அறிவிப்பும் வரவேற்பும் இன்றைக்கு மட்டும் (செப். 10) இரண்டு திரு மணங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அலுவலகங்களில் நடத்தியிருக்கிறோம். நாங்கள் அலுவலகம் கட்டியது எவ்வளவு சரியானது. மேலும் மேலும் நாங்கள் அலுவலகங்களை எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் கட்டுவோம். எல்லா அலுவலகங்களிலும் வரக்கூடிய காதலர்களுக்கு திருமணத்தை செய்து வைப்போம். நாங்கள் உங்களுக்கு பாது காப்பாக இருக்கிறோம். திருமணத்தை செய்து வைப்பதற்கும் திருமணத்திற்கு பிறகு உங்களை பாதுகாப்பதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சக்கணக்கான தோழர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதைத்தான் நாங்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளோம். இப்போதெல்லாம் எங்கள் அலு வலகங்களுக்கு காதல் ஜோடிகளின் அழைப்பு வராத நாளே கிடையாது. இது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. நம்பிச் செல்லலாம் என்கிற ஒரு உணர்வை தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில், இளம்பெண்கள் மத்தியில் இதன் மூலமாக நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். சாதி வெறியர்களை அல்ல, தமிழ்நாட்டு மக்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது சாதிச் சண்டைகள் வேண்டாம். சமயச் சண்டைகள் வேண்டாம். நம்முடைய குழந்தைகள் விரும்புகிறார்கள் என்றால் ‘சாதி’ என்று கேளாமல் ‘சரி’ என்று கூறி அவர்களை சேர்த்து வையுங்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது நமது அரசமைப்புச் சட்டம். இணையரை தேர்வு செய்யும் உரிமை யை சட்டம் வழங்கியுள்ளது. அது மறுக்கப்படு வதால்தான் தனிச்சட்டம் கோருகிறோம். தனிச்சட்டங்களின் சிறப்பு ஓராண்டுக்கு முன்பு சிபிஎம் சட்ட மன்றக்குழு தலைவர் நாகை மாலி, ஆண வக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சட்ட மன்றத்தில் வலியுறுத்தினார். தமிழக முதல்வர் அதற்கு பதிலளிக்கையில், தற்போது இருக்கும் குற்றவியல் சட்டங் களால் அத்தகைய குற்றங்களை தடுக்க முடியும்; தனிச்சட்டம் தேவை இல்லை என்றார். 75 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இந்த குற்றவியல் சட்டங்களால் ஆணவக்கொலைகளை தடுக்க முடிய வில்லையே! தமிழகத்தில் பல பஞ்சாயத்து தலைவர்களால் தேசியக் கொடியை ஏற்ற முடியவில்லை. அவர்களுக்கான நாற்காலி யில் அமர்ந்து பஞ்சாயத்து கூட்டங்களை நடத்த முடியவில்லை. தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று 1950 ஆம் ஆண்டு அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 17 இல் அம்பேத்கர் எழுதி வைத்துள்ளார். ஆனால், எல்லா வடிவங் களிலும் தீண்டாமை தொடர்கிறது. அத னால்தான் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்டு 1995 இல் விதிகள் உரு வாக்கப்பட்டன. அதில் குற்றவாளிகளை தண்டிப்பது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் பட்டியல் சாதியினருக்கு எதிராக செயல்பட்டால் அவர்களுக்கும் தண்டனை அளிக்க இந்த சட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தித்தான் வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 269 அதிகாரி களுக்கும் தண்டனை பெற்றுத்தந்தது சிபிஎம். அதுபோல் கொடியங்குளம், நாலு மூலைக்கிணறு வன்கொடுமைகளை கூற லாம். குழந்தைகளுக்கு எதிரான வன்கொடு மைகளை தடுக்க போக்சோ சட்டம், குடும்பங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், போன்றவை முந்தைய சட்டங்களின் போதாமையால் கொண்டுவரப்பட்டவைதான். விரைவாக நீதி, நிவாரணம் பெற… கடலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சமூ கத்தைச் சேர்ந்த கண்ணகி -முருகேசன் ஆகி யோர் காதல் திருமணம் செய்துகொண்டு தலைமறைவாக வாழ்ந்தனர். ஊரே ஒன்று கூடி, அவர்களைக் கொல்வது என முடிவெடுத்து, இழுத்து வந்து பொது இடத்தில் காதுகளில் விஷம் ஊற்றி இருவரையும் கொன்றனர். கொலை செய்யப்பட்டவர்களை காவல்துறை ஆய்வாளரின் அறிவுரைப்படி எரித்து தடயமில்லாமல் செய்தனர். உச்சநீதிமன்றம் வரை சென்று நீண்ட காலத்துக்கு பிறகு காவல்துறை அதிகாரி உட்பட குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்கள். தனிச்சட்டம் இருந்தால் இதுபோன்ற காலதாமதம் ஏற்படாது. கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி தோழர்கள் இரா.முத்தரசன், திருமாவளவன் ஆகி யோருடன் முதல்வரை சந்தித்து ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தினோம். தனி சிறப்புச் சட்டம் தேவை என்பதை நாங்கள் மட்டும் கோர வில்லை. தேசிய சட்ட ஆணையம், தேசிய மகளிர் ஆணையம் இதை வலியுறுத்தி யுள்ளன. 2018 ஆம் ஆண்டு சக்தி வாகினி எதிர் ஒன்றிய அரசு வழக்கில், இப்படி ஒரு தனி சட்டம் வேண்டும் என்பதை உச்ச நீதி மன்றம் வலியுறுத்தியுள்ளது. நாங்கள் நடத்திய திலிப் குமார்- விமலாதேவி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தனிச்சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறது. எனவே, நடக்கவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தில் தனிச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த வாய்ப்பை விட்டால் மற்றொரு வாய்ப்பு இந்த அரசுக்கு கிடைக்காது. இவ்வாறு அவர் பேசினார்.