tamilnadu

img

சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி மேம்பட தனி வங்கி தேவை... பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்

கோவை:
சிறு,குறு தொழில்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிற நிலையில் இத்தொழில் மேம்பட இவற்றிற்கென தனி வங்கியை உருவாக்கிட வேண்டும்என வணிகவரித்துறை கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார்.

கோவை - ஈரோடு கோட்டங்களின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை வணிகர்களுடனான கலந்தாய்வுகூட்டம் தமிழக அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை - ஈரோடு கோட்டங்களின் வணிகர்கள், தொழில் துறை சங்க நிர்வாகிகள் சிறு குறு தொழில் முனைவோர்,பங்கேற்று கருத்துகளை முன்வைத்தனர். கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். இதில், உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திமுக பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில்,

முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கக்கூடாது என்பது எங்களது நிலைப்பாடு. இது சிறு,குறு தொழில்முனைவோரை மட்டுமல்லாது நுகர்வோரையும் பாதிக்கும். ஆகவே நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரிலேயே ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என அழுத்தமாக பதிவு செய்தேன். மேலும், விற்பனையாளர் ஜிஎஸ்டி வரி கட்டவில்லை என்றால்அதனை நுகர்வோர் கட்ட வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. இது நுகர்வோரிடம் சுமையேற்றும் செயலாகும். இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் எங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்வோம். பல்வேறு நெருக்கடிகளை சிறு,குறு தொழில்முனைவோர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இதனால் வங்கியில் பெற்ற கடனை உரிய காலத்தில் கட்ட முடியாத நிலைஉள்ளது. ஆனால் வங்கிகள் தொடர்ந்து நெருக்கடியை தொழில்முனைவோர்களுக்கு கொடுத்து வருகிறது. பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் இந்த சிறுகுறு தொழில்களை பாதுகாக்க வேண்டும். கேரள மாநிலத்தில் உள்ளதைப்போல தமிழகத்தில் சிறுகுறு தொழில்களுக்கெனதனியாக வங்கிகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அமைச்சர் பெருமக்கள் இதனை தமிழகமுதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதேபோன்றுபல்வேறு துறைகளுக்கு நலவாரியம் உள்ளதைப் போல வணிகர் நல வாரியம் அமைக்கப்பட வேண்டும்.தமிழகம் அனைத்து துறையிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்கிற முனைப்போடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுக்கும் முயற்சியின் ஒருபகுதியாக இந்த கூட்டம் நடைபெறுகிறது என்பது பாராட்டத்தக்கது என்றார்.

இதனையடுத்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில்,

தமிழகத்தில் மிகப்பெரியவருவாய் ஈட்டும் துறையாக இந்த துறை உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று காலத்தால் மிகப்பெரிய ஒரு பாதிப்பை சந்திக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா நிவாரணங்களும் நீங்கள் வாரி வழங்கியுள்ளதும் மறுக்க முடியாது.தங்களின் கோரிக்கைகள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்வார் என்றார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், தமிழக முதல்வர் பொறுப்பேற்றதிலிருந்து, மக்களின் கோரிக்கைகள், சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளை கேட்டு அந்த கருத்துக்களை கொண்டு வர வேண்டும் என கூறியதை அடுத்து, இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகின்றது. கோவை, சேலம், கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் அதிகளவில் வருவாய் தருகின்றது. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கும் கோவை கொரோனா காலத்தில் பெரிதளவில் பாதிக்கப்பட்டது என்பது தெரியும், தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, உங்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகின்றது. அதற்காக வணிகவரித்துறை அமைச்சரை இங்கு அனுப்பி வைத்துள்ளார். ஒரு நேர்மையான, வெளிப்படைத் தன்மையான ஆட்சியை தமிழக முதல்வர் நடத்தி வருகின்றார் என்றார்.

 இறுதியாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில்;-

 தொழில்துறைக்கு கோவை தமிழகத்தின் முன்னோடி மாவட்டமாக விளங்குகின்றது. உங்களின் கருத்துக்களை கேட்டறிந்து, எல்லா மக்களும் பாராட்டும் வகையில் ஆட்சிபுரிந்து வரும் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகின்றது. பல்வேறு தொழில்கள் செய்து வரும் நீங்கள் பல்வேறு கோரிக்கைகளை கூறியுள்ளீர்கள். சம்பிரதாயத்திற்காக இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக உங்களின் கருத்துக்களை கேட்க ஆள் இல்லை. தற்போது உங்களின் கருத்துக்களை கேட்டுள்ளோம். உங்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையில் மக்கள் பிரதிநிதிகளாக நாங்கள் இருப்போம். உங்களுக்கு உற்ற நண்பர்களாக இருப்போம், எங்கள் அதிகாரிகள், நேர்மையாக உள்ளவர்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளோம். தமிழகம் தற்போது 5 லட்சம் கோடி கடனில் உள்ளது. போலியாக பில் இல்லாமல் வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களை நீங்கள் அடையாளப் படுத்த வேண்டும். உண்மையாக முதலீடு செய்து தொழில் செய்பவர்கள், உங்களை ஊக்கப்படுத்தவும், உதவி செய்யவும் நாங்கள் உள்ளோம். கோடி கணக்கில் முதலீடு செய்து வியாபாரம் செய்பவர்கள் உள்ளனர். ஆனால், ஒரு சிலர் ஏமாற்று பேர் வழியாகஉள்ளனர். போலியாக தொழில் செய்பவர்களை நீங்கள் ஊக்குவிக்காதீர்கள். உங்களின் குறைகளை கூறியுள்ளீர்கள். அதை நிறைவேற்ற துணை நிற்போம். வாக்குறுதியில் சொல்லாததை கூட தமிழக முதல்வர் அவர்கள் நிறைவேற்றி வருகின்றார். வணிகம் மற்றும் பதிவுத் துறை மூலம் 87 சதவீதம் வரி வருகின்றது. உண்மையாக வரியை நீங்கள் செலுத்தி தமிழக அரசிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

 இந்த கலந்தாய்வு கூட்டத்தில் வணிக வரித்துறைசெயலாளர் ஜோதி நிர்மலா சாமி, வணிகவரித்துறை ஆணையாளர் எம்.ஏ.சித்திக், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, இணை ஆணையர்கள் மெர்ஸி ரம்யா, ஞானகுமார், கூடுதல் ஆணையாளர்கள் பழனி, ஞானசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சிவகாமி சுந்தரி, இளங்கோ, விவேக் மற்றும் கோவை திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், சி.ஆர்.இராமச் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.