tamilnadu

img

கொடநாடு கொலை வழக்கு: தொழில் அதிபர் மகனிடம் 2வது நாளாக விசாரணை  

ஜ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் கொடநாடு வழக்கு தொடர்பாக தொழில் அதிபர் மகன் செந்தில்குமாரிடம் 2வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர்.    

கடந்த 2017 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தற்போது மறு விசாரணை நடைபெற்று வருகிறது.  

தொடர்ந்து, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன், சஜிவன் மற்றும் சசிகலாவிடமும் விசாரணை நடத்தினர்.  

கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி அதிமுக தலைமையுடன் நேரடி தொடர்பில் இருந்தவர் எனவும், அவரின் பராமரிப்பின் கீழ் தான் கொடநாடு எஸ்டேட் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமியின் மகனான செந்தில்குமாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த தனிப்படை போலீசார் அவருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஷைலி நிவாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நேற்று கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரிடம் 4 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் 2வது நாளான இன்றும் கொடநாடு சொலை வழக்கு தொடர்பாக செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவருக்கு தெரிந்த தகவல்களை, தனிப்படை போலீசார் தெரிவித்தார். அவற்றை போலீசார் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.