கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க துவங்கியிருப்பது அதிமுக தலைவர்களை குலை நடுங்க வைத்திருக்கிறது. ஆட்சிக்காலத்தில் தங்களது ஆபத்பாந்தவனாக இருந்த ஆளுநரை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் முறையிட்டுள்ளனர்.
கொடநாடு வழக்கில் தங்களுக்கு தொடர்பில்லை என்றால் சட்டப்பூர்வமாக அதை சந்திப்பதை விடுத்து ஆளுநரை சந்திப்பது ஏன்?என்ற கேள்வி எழுகிறது. இந்த வழக்கில் தன்னுடைய பெயரையும் சேர்த்திருப்பதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பொய்வழக்கு போட்டு பழி வாங்குவதாக அதிமுகவினர் கூறுகின்றனர். மக்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எழுப்புவதற்கு பதிலாக தங்களது பிரச்சனைக்காக வெளிநடப்பு செய்து வீதியில் போராட்டம் நடத்துகின்றனர்.
கொடநாடு கொலை, கொள்ளை விசாரணையை பொறுத்தமட்டில் தேர்தல் வாக்குறுதியைத்தான் திமுக அரசு நிறைவேற்றுகிறதே தவிர அரசியல் நோக்கத்தோடு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார். அரசின் நடவடிக்கைகள் அச்சமூட்டுவதாக இருக்கிறது என்று கூறி பேரவையிலிருந்து பாஜகவினர் வெளிநடப்பு செய்திருப்பது கேலிக்கூத்து. ஆள்தூக்கி சட்டங்களை பயன்படுத்தியும், சொந்தநாட்டு மக்களை வேவுபார்த்தும் இந்திய மக்களைஅன்றாடம் அச்சுறுத்துகிற ஒன்றிய ஆளுங்கட்சியின் பிரதிநிதிகள், கூட்டாளிக்கட்சியினருக்கு அச்சம் ஏற்பட்டு விட்டதாகக் குதிக்கின்றனர்.
நியாயமாக பார்த்தால் தங்களது கட்சித்தலைவரான ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு மாளிகையில் நடந்த தொடர் கொலைகள் மற்றும் கொள்ளை குறித்து முழுமையாக விசாரணை நடத்த அதிமுகவினர் ஒத்துழைக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் அங்கு நடந்த கொள்ளை மற்றும் தொடர் கொலைகள் குறித்து தமிழக மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.இந்த வழக்கின் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அரசின் கோரிக்கைக்கு உதகைநீதிமன்றம் அனுமதியளித்த பின்னணியில்தான் மறு விசாரணைக்கு ஆஜராக சயானுக்கு கோத்தகிரி போலீசார் அழைப்பாணை அனுப்பினர். தனக்கு நெருக்கமான சஜீவன் பெயர் விசாரணையில் வெளிவந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி தரப்பு பதற்றப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தின்அனுமதியை அரசுத்தரப்பு பெறவில்லை என்று அதிமுக தரப்பு கூறுவதில் அர்த்தமில்லை என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறியதைதொடர்ந்தே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் அது தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டது. இந்நிலையில் கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு விசாரணை சட்டப்பூர்வமாகவும் விரைவாகவும் நடத்தப்பட்டு தவறிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும். அந்த மாளிகையின் மர்மங்கள் விலக வேண்டும்.