இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில் ஆளுநர் பதவியென்பது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேஓர் இணைப்புப் பாலமாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.காலப்போக்கில் செல்வாக்கு இழந்த, தேர்தலில் தோல்வியுற்ற சொந்தக் கட்சியினரை மன நிறைவு கொள்ளச் செய்வதற்கான பதவியாக அது உருமாற்றப்பட்டது.மத்திய அரசின் கங்காணியாக ஆளுநர் பதவியை மாற்றிய பெருமையை நேரு பெற்றார்.உலகிலேயே முதன்முறையாகத் தேர்தல் மூலமாக 1957ல் கேரளாவில் அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சியை - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டின் ஆட்சியை ஆளுநரின் தவறான அறிக்கையைப் பெற்றுக் கலைத்தவர், ஜனநாயகக் காவலர் என்று கருதப்பட்டு வந்த நேரு.பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பி.எஸ்.குமாரசாமிராஜா ஒரிஸ்ஸா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பொய்யான குற்றச்சாட்டுக்களை ஆளுநரிடமிருந்து பெற்றுப் பலமுறை மாநில அரசுகளின் ஆட்சியை ஜனநாயக விரோதமாகக் கலைப்பது வாடிக்கையானது.காலையில் தமிழகத்தில் கலைஞர் ஆட்சியைப் புகழ்ந்த ஆளுநர், மாலையில் ஆட்சிக் கலைப்புக்குக் காரணமாகிறார்!எம்.ஜி.ஆரும் இதிலிருந்து தப்ப முடியவில்லை.கர்நாடகத்தில் எஸ்.ஆர்.பொம்மை ஆட்சி அநியாயமாகக் கலைக்கப்பட்ட போது உச்சநீதிமன்றம் மத்திய அரசின் தலையில் பலமாகக் குட்டியது.ஆளுநரின் துணையுடன் அரங்கேற்றப்படும் அராஜகத்தைக் கண்டே அண்ணா “ஆட்டுக்குத் தாடி போல மாநிலத்துக்கு ஆளுநர் பதவி தேவையற்று” எனப் பன்முறை வலியுறுத்திக் கூறினார்.புதுவை மாநிலத் துணை நிலை ஆளுநராக இருக்கும் கிரண்பேடி தம்மை முடிசூடாத மகாராணியாகவே கருதி ஆட்டம் போட்டு வருகிறார்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவை, அமைச்சரவை ஆகியவற்றைச் சற்றும் மதிக்காமல் வெறும் நியமனப் பதவியில் அமர்ந்துள்ள அம்மையார் சர்வாதிகாரி போன்று செயல்படுகிறார்.பாசிஸ மோடியின் நினைப்புக்கேற்பப் புதுவை மாநில முதல்வரின் செயல்பாடுகளில் தேவையின்றிக் குறுக்கிட்டு ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கிறார்.அண்மையில் உச்சநீதிமன்றம் கிரண்பேடியைஅடக்கி வாசிக்குமாறு கூறியுள்ளது. பிரதமர் மோடி உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து, கிரண் பேடியின் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முனைப்புக் காட்டாமல், சட்டத்திருத்தத்தின் மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வழிவகைகளை ஆராய்கிறார்.
நவீன ஹிட்லரின் சிந்தனை வேறு எவ்வாறிருக்க முடியும்? தேர்தல் பரப்புரைக்குத் ‘தேசப் பாதுகாப்பு’ என்ற ஒன்றை மட்டுமே உச்சரிப்பது சர்வாதிகாரியின் முகமூடி என்பதை மக்கள்அறிவர்.தமிழ்நாட்டில் புரோகித் என்றோர் ஆளுநர், தம் பதவிக்குரிய பணிகள் யாவை என்பதை மறந்துவிட்டும், பேருந்து நிலையங்களில் கீழேபோடப்பட்ட காகிதத் துண்டுகளைப் பொருக்கும்மிக அவசரமான, அவசியமான பணிக்காக கிண்டிமாளிகை வாசலைக் கடந்து நகர்வலம் வந்தார்!மாநில அரசின் அதிகாரத்தில் தலையிட்டு மாவட்டஆட்சியர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு அறிவிக்கப்படாத முதல்வராகச் செயல்பட்டார்.எடப்பாடியும் பன்னீரும் பதவி சுகத்தில் மூழ்கியிருப்பதால் ஆளுநரின் தலையீட்டை மனமுவந்து ஏற்றுக் கொண்டனர்.எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்ததால் தலையிடும் வேலையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் ஆளுநர்!பிளசெண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் அன்றையமுதல்வர் ஜெயலலிதாவுக்குச் சிறைத் தண்டனைவழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.தங்கள் கோபத்தை வெளிப்படுத்த முனைந்தஅதிமுக கட்சியினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தீர்ப்புக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் சென்றசுற்றுலாப் பேருந்துக்குத் தீ வைத்தனர் அதிமுகவினர்.
வசந்தத்தின் வாயிலில் நின்ற மூன்று மாணவிகள் உயிரோடு தீயில் கருகி மாண்டனர்.அந்நிகழ்வு தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு மரண தண்டனை விதித்தது நீதிமன்றம்.மேல்முறையீட்டில் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.சில ஆண்டுகள் சிறைவாசமிருந்த அம்மூவரையும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டிவிடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரைத்ததுஎடப்பாடி அரசு.ஆளுநர் பன்வாரிலால் அதை ஏற்க மறுத்து அரசுக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்.தியாகிகளைக் காப்பாற்றாவிட்டால் எடப்பாடி அரசுக்கு என்ன மரியாதை? பரிந்துரை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது.ஆளுநர் கருணையுள்ளவர், இரக்கமுள்ளவர்,வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் வள்ளலாரின் நெஞ்சம் கொண்டவர்! மூவரையும் விடுதலை செய்ய ஒப்புதல் வழங்கிவிட்டார்.இன்று மூவரும் என்றைக்கும்போல சுதந்திரமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருபத்தியெட்டு ஆண்டுகளாகச் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழு பேரின் நிலை என்ன?மாநில அரசின் அதிகாரத்தைக் கொண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஏழு பேரையும்விடுதலை செய்து ஆணை பிறப்பித்தார்.
அத்துடன் முடிவுற்றிருக்க வேண்டிய விஷயம் மத்திய அரசால் உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.ஆணா, பெண்ணா என்று அறுதியிட்டுக் கூறமுடியாத ஒரு தீர்ப்பை வழங்கிச் சிக்கலை மேலும்கூடுதலாக்கிவிட்டார் நீதிபதி சதாசிவம்.அதற்குப் பரிசாக நீதிபதிக்குக் கிடைத்ததுதான் கேரள ஆளுநர் பதவி!ஏழு பேரின் விடுதலைக்குத் தமிழகச் சட்டப் பேரவை ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதை யாரும் மறக்க முடியாது.எடப்பாடி அரசு ஏழு பேர் விடுதலைக்குப் பரிந்துரைசெய்து ஆளுநர் பன்வாரிலாலுக்குஅனுப்பியது. ஆளுநருக்கு வேறு வேலை இல்லையா? ஏழுபேரும் சிறையிலேயே சாவதால் அவருக்கு என்ன இழப்பு?பரிந்துரையைத் திருப்பி அனுப்பிவிடுகிறார் ஆளுநர். எடப்பாடியும் பன்னீரும் மோடியின் தயவுக்காகக் காத்து நிற்பது போல் பாவனை செய்கின்றனர்.கட்சிக்காரர்கள் மூவரின் விடுதலைக்காக ஆளுநருக்கு இரண்டாம் முறை பரிந்துரையை அனுப்பி விடுதலையைப் பெற்றுத் தந்த எடப்பாடியும் பன்னீரும் ஏழு பேர் விஷயத்தில் ஏன் மவுனம்சாதிக்கின்றனர்?
இரண்டாம் முறை அனுப்பினால் பன்வாரிலால் எடப்பாடி ஆட்சியைக் கலைத்துவிடுவாரா?அண்மையில் அமெரிக்கை நாராயணன் என்ற காங்கிரஸ் காரரும் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நேரத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிலரும் உச்சநீதிமன்றத்தை அணுகி ஏழு பேரையும் விடுதலை செய்யக் கூடாதென வேண்டிக் கொண்டனர்.உச்சநீதிமன்றம் விஷயம் ஆளுநரின் கையிலிருப்பதாகக் கூறித் தன் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டது.ஆயினும் ஆளுநர் பன்வாரிலால் ஏழு பேரைவிடுதலை செய்ய மாட்டார் என்றே தெளிவாகத் தெரிகிறது.ஆனால் தமிழிசையும் பொன்னாரும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வற்புறுத்தவேண்டாமா? எடப்பாடியும் பன்னீரும் ஏழு பேர்விடுதலைக்காக முயற்சி ஏதும் செய்திட வேண்டாமா?மூவரை விடுதலை செய்துவிட்டு ஏழு பேருக்குத் தயக்கம் காட்டினால் அதன் பெயர் என்ன?
கட்டுரையாளர் : தமுஎகச விருதுநகர் மாவட்டக்குழு (சிறப்பு அழைப்பாளர்)