பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் கு.சண்முகசுந்தரத்தை ஆதரித்து உடுமலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஆர்.டி.மாரியப்பன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றி பேசினார். அவர் பேசுகையில், பாஜக அரசானது கார்ப்பரேட்நலன் காக்கும் அரசாக செயல்படுகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வேதாந்தா கம்பெனிக்கு தற்போது வரை டெண்டர் வழங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவற்றையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய மாநில அரசு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி, மத்திய அரசிடம் மண்டியிட்டு கொண்டு இருக்கிறது. குறிப்பாக, குட்கா ஊழல், ஆம்னி பஸ் ஊழல், நெடுஞ்சாலைத்துறை ஊழல், உள்ளாட்சித் துறை ஊழல் என ஊழல் சர்ச்சையில் சிக்கி தமிழகத்தின் உரிமையை குழிதோண்டி புதைத்து விட்டனர். அதேபோல், நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்தும் விடுபட்டு உள்ளனர். நான் தனிநபர் மசோதாவாக நதிகள் தேசியமயம் ஆக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசி, அந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டு வந்த நிலையில் தற்போது நதிகளை அந்தந்த மாநிலங்களின் உரிமைகளில் சேர்ப்பதற்கு மத்திய அரசு முனைந்து வருகிறது. இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாலைவனமாக்கி விடும் என்பது மத்திய அரசுக்கும் தெரியும். அவர்களின் நோக்கம் எல்லாம் தமிழகத்தை வஞ்சிப்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். மக்களின் கல்விக் கடனையும்,விவசாய கடனையும் தள்ளுபடிசெய்ய முடியாது என்று கூறியமத்திய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடியை தள்ளுபடி செய்தது எவ்வாறு.இந்த அரசு கார்ப்பரேட்களின் அரசு, திட்டமிட்டு பன்னாட்டு கம்பெனிகளுக்கு கடனைக் கொடுத்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் செய்து விட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரையிலும் தமிழக அரசு திட்டமிட்டு கலவரத்தை தூண்டி உள்ளது என்பதை விசாரணை ஆணையமே தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால், அரசுவேதாந்தா குடும்பத்தை காப்பாற்ற13 அப்பாவி உயிர்களை பலி வாங்கியுள்ளது. இவ்வாறு பல்வேறு வகையிலும் மக்களுக்கு எதிராக செயல்படும் அரசுகளை வீட்டுக்குஅனுப்ப வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.இந்த கூட்டத்தில் கூட்டணிகட்சி தலைவர்கள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.