tamilnadu

100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு 3 மாத சம்பளம் பாக்கி - உடனே வழங்க விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், ஏப். 29–திருப்பூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த சம்பளத் தொகையை உடனே வழங்குமாறும் மாவட்ட நிர்வாகத்துக்கு திருப்பூர் மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.திருப்பூர் மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் திங்களன்று மாவட்டத் தலைவர் சி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் உள்படமாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: திருப்பூர் மாவட்டம் முழுவதும் நூறு நாள் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம்முதல் ஏப்ரல் இறுதி வரை மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கப்படாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும்.அதேபோல் பல ஆண்டு காலமாக முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்தவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அதை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்வதுடன், புதிதாக விண்ணப்பங்கள் பெறுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.உடுமலை வட்டம் சின்னவீரம்பட்டி ஊராட்சி எம்ஜிஆர் நகர், எலையமுத்தூர் ஊராட்சி செல்வபுரம் ஆகியகிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதி முழுவதும் கிராம நத்தமாக வகை மாற்றம் செய்யப்படாததால் அவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். எனவே வருவாய் பதிவேடுகளில் அப்பகுதிகளை உரிய வகை மாற்றம் செய்திட வேண்டும்.மடத்துக்குளம் வட்டம் குமரலிங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும் இதுவரை இடம் அளந்துவிடப்படவில்லை. அங்கு பட்டா வைத்திருப்போருக்கு உரிய இடத்தை வருவாய்த்துறை அளந்து கொடுத்திட வேண்டும்.மடத்துக்குளம் வட்டம் துங்காவி ஊராட்சி மலையாண்டிபட்டிணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவ்வீடுகளுக்குவீட்டுவரி, மின் இணைப்பு கட்டணம் உள்ளிட்டவைகளைத் தொடர்ந்து செலுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை மேற்கண்ட வீடுகளுக்கு உரிய பட்டா வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஏழை குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.