கோவை, மே 9–ஊழல் முறைகேடு, நிர்வாக சீர்கேடு ஆகியவற்றில் சிக்கி தவிக்கும் தொலைத்தொடர்பு கூட்டுறவு சங்கத்தின் நடவடிக்கைகளை கண்டித்து வியாழனன்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோவையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை ரயில்நிலையம் எதிரே உள்ள தொலைதொடர்புத்துறை பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை வியாழனன்று திடீரென பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறுகையில், அனைத்து ஊழியர்களிடமும் மாதம் தவறாமல் கூட்டுறவு சங்கத்திற்கு என ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த எட்டு மாத காலமாக உறுப்பினர்களுக்கு அவசரத் தேவைக்குக்கூட கடன் கொடுப்பதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை அனைவருக்கும் டிவிடெண்ட் என்பது உறுதியாக கிடைத்து வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக இழுத்தடித்து வழங்கப்படுகிறது. கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்து வெளியேறிய உறுப்பினர்களுக்கு கடந்த ஏழு மாத காலமாக கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கவில்லை. உறுப்பினர்களின் மரணத்திற்கு பிறகு அவர்கள் குடும்பத்திற்கு சேரவேண்டிய தொகையையும் வழங்காமல் கூட்டுறவு சங்கத்தை சீர்குலைத்து வருகின்றனர். ஆகவே கடன் கேட்கும் உறுப்பினர்களுக்கு உடனடியாக கடனை வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் ஊழல் செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர். நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பிஎஸ்என்எல் ஊழியர்கள் தெரிவித்தனர். முன்னதாக, இப்போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் மணி, நீலகிரி மாவட்ட செயலாளர் ஜேக்கப் மௌரிஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கத்தின் அலுவலகத்தின் தரையில் அமர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பாபுராதா கிருஷ்ணன் போராட்டத்தின் அவசியம் குறித்து உரையாற்றினார்.