tamilnadu

img

சர்வால் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கு

கோவை, ஜூன் 3–தொழிலாளர்களுக்கு ஊதியம் தராமல் தொழிலாளர் விரோதப் போக்குடன் செயல்படும் சர்வால் இன்ஜினியரிங் நிறுவனத்தை கண்டித்து திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு மற்றும் பிஎம்எஸ் சங்கத்தினர்மனு அளித்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே காரமடைபகுதியில் சர்வால் இன்ஜினியரிங் நிறுவனம் உள்ளது. காகிதமெஷின்கள் தயாரிக்கும் இந்நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிர்வாகம் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை. குறிப்பாக கடந்த8 மாதங்களாக ஊதியம் வழங்காமலும், தொழிலாளர்களிடத்தில் ஓய்வூதியத் தொகை மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி தொகை செலுத்தப்படவில்லை. இதனால்பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், மருத்துவ உதவியும் கிடைக்கப் பெறாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை நிர்வாகத்திடம் நேரிடையாகவும், தொழிலாளர் நலத்துறை மூலமாக பேசியும், இதுவரை தீர்வு ஏற்படவில்லை. இதனையடுத்து தொழிலாளர் விரோதப் போக்குடன்செயல்படும் சர்வால் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிஐடியு இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க கௌரவதலைவருமான யு.கே.வெள்ளிங்கிரி தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. சிஐடியு நிர்வாகி ஏ.ஜி.சுப்பிரமணியன் மற்றும் பிஎம்எஸ் சங்கத்தின் முருகேசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர்.