சேலம், ஜூலை 15- கடந்த 29 ஆண்டுகளாக அகதிகளாக முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சேலம் மாவட்டத்தில் பவளத்தானூர், கெங்கவல்லி, நாகியம்பட்டி, செந்தாரப்பட்டி உள்ளிட்ட முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தைப் பொறுத்தவரை 70 ஆயிரம் குடும்பத்தினர் அகதிகளாக வாழ்ந்து வருகிறோம். குறிப்பாக சேலத்தில் மட்டும் பல்வேறு முகாம்களில் 900 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தமிழக அரசு சார்பில் இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட போதிலும் அடிப்படை உரிமைகள் தங்களுக்கு மறுக்கப்படுகிறது. இதன் காரணமாக வாக்குரிமை, வேலைவாய்ப்பு, உயர்கல்வி போன்ற உரிமைகள் பெறுவதில் தடையாக உள்ளது. இந்த நிலையை மாற்ற கடந்த 29 ஆண்டுகளாக முகாம்களில் தங்கியிருக்கும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.