கோவை, மே 14–கோவை நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த இருவரை பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளில் வெட்டிச் சாய்த்தசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கணபதி பழைய சக்திசாலை, காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள் பிரதீப் மற்றும் தமிழ்வாணன். இவர்கள் இருவரும் அடிதடி வழக்கில் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் இரண்டில் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்நிலையில், செவ்வாயன்று இருவரும் வழக்கம்போல் கையெழுத்திட்டு விட்டு நீதிமன்றத்திற்கு வெளியேறி அவினாசி சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, இவர்களை இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளைக் கொண்டு சரமாரியாக வெட்டினர். இதில், பிரதீப்புக்கு முதுகு, மார்பு, கால் உள்ளிட்ட 4 இடங்களிலும், தமிழ்வாணனுக்கு கை, முதுகு ஆகிய இடங்களில் வெட்டு விழுந்துள்ளது. இளைஞர்கள் இருவரும் படுகாயமடைந்து சாலையில் மயங்கிவுடன் அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு படுகாயமடைந்த இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரதீப்பின் உடல் நிலை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக உதவி ஆணையாளர் எழிலரசு மற்றும் காவல் ஆய்வாளர் தெய்வசிகாமணி தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாகவே இச்சம்பவம் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக சதீஷ், ஹரி, தனபால், சூர்யா ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்த கொலைவெறித் தாக்குதல் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.