கோவை, ஏப். 22–ஓலா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் இருசக்கர வாகனத்தில் (ரேப்பிட்டோ) பயணிகளை ஏற்றி சவாரிக்கு செல்வதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று ஆட்டோ ஓட்டுனர்கள் புகார் மனு அளித்தனர். கோவை வளர்ந்து வரும் நகரம் என்பதால் அனைத்து தொழில்களிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கடை விரித்துள்ளது.மளிகையில் கடை துவங்கி மிகப்பெரியசாப்பிங் மால் வரை அனைத்திலும் ஆதிக்கம் செலுத்த துவங்கிவிட்டது. இப்போது சாலை போக்குவரத்திலும் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக ஊபேர், ஓலா உள்ளிட்ட கால்டேக்சிகளை கொண்டு வந்தவர்கள் இப்போது ரேப்பிட்டோ என்கிற இருசக்கர வாகனத்தையும் அனுமதித்துள்ளனர். நியாயமான மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் விதிமுறைகளை மீறி இயங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வாகனங்கள் தங்களது இஷ்டத்திற்கு வாடகையை நிர்ணயித்து வருகிறது.
இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் அரசு நிர்வாகம் எடுப்பதில்லை. எவ்வித அனுமதியுமின்றி இயங்கும் இதுபோன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் வாகனங்களால் சுயமாக தொழில் செய்யும் ஆட்டோ ஓட்டுனர்கள் நேரிடையாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதுபோன்ற நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோவையில் ரேப்பிட்டோ இருசக்கர டாக்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. அரசும், வட்டார போக்குவரத்து அலுவலரும் நாங்கள் இந்த கட்டணத்தில்தான் ஆட்டோ இயக்க வேண்டும் என்று கறாராக உத்தரவிடுகின்றனர். ஆனால் எவ்வித நிர்ணயிப்பும் இல்லாமல் இந்த இருசக்கர வாகனங்கள் இயங்குவதால் தங்களது வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. தனியார் இருசக்கர டாக்சிகளுக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெறவேண்டும். மேலும் ஓன் போர்டு வாகனங்களை பொது மக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என மோட்டார் வாகன சட்டம் சொல்கிறது. ஆனால் தற்போது கோவை நகரில் இயங்கும் ரேப்பிட்டோ நிறுவன இருசக்கர வாகனங்கள் அனைத்தும் ஓன்போர்டு வாகனங்களே. இப்படியிருக்க அரசு அலட்சியமாக இருப்பது ஏன் என தெரியவில்லை. உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தனர்.