கோவை, ஏப்.7-பஞ்சாலைகளில் பணியாற்றும் வளரிளம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேட்பாளர்கள் உறுதியளிக்க வேண்டும் என மக்கள் செயல்பாட்டுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் மக்கள் செயல்பாட்டுக்குழு மற்றும் வளரிளம், இளம் பெண்கள் பாதுகாப்பு குழு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட குழு உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தங்களது கோரிக்கைகளை வெளியிட்டனர். பின்னர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் நம்பி பேசுகையில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்டதமிழகத்தின் 10 மாவட்டங்களில் இயங்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஞ்சாலைகளில் சுமங்கலி திட்டம் என்றபெயரில் இரண்டரை லட்சம் இளம் பெண்கள் கொத்தடிமைகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உழைப்பு சுரண்டலுக்கு ஆளாவதாக தெரிவித்தார். மேலும் பல்வேறு சட்டங்கள் அமலில் இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்த படுவதில்லை எனக்கூறிய அவர், இக்குழுவின் 35 கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என அனைத்து வேட்பாளர்களையும் சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, இந்த கூட்டத்தில் பஞ்சாலையில் பணியாற்றி தனது கைவிரல்களை இழந்த பழனியம்மாள் என்ற பெண் கலந்து கொண்டு தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து கண்ணீர் மல்க தெரிவித்தார்.