tamilnadu

img

இயந்திரத்தில் சிக்கி குழந்தையின் விரல்கள் துண்டிப்பு பஞ்சாலை நிர்வாகம் கைவிட்டதாக பெற்றோர் கண்ணீர்

கோவை, ஏப். 22– பஞ்சாலை நிர்வாகத்தின் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக மூன்று வயது குழந்தையின் கை இயந்திரத்தில் சிக்கி நான்கு விரல்கள் துண்டாகி உள்ளது. மருத்துவ செலவைக்கூட ஏற்காமால் நிர்வாகம் வெளியேற்றி விட்டதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கண்ணீருடன் புகார் அளித்தனர். கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த முருகேசன், ஹேமா தம்பதி. இவர்களுக்கு ரித்தீஸ் பாண்டி என்கிற மூன்று வயது குழந்தை உள்ளது. இப்பெற்றோர்கள் கோவை சோமனூர் ஊஞ்சப்பாளையம் பகுதியில் உள்ள சிந்துபிரியா என்கிற தனியார் நூற்பாலை ஒன்றில் தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதி இவர்களது 3 வயது மகன் ரித்தீஷ் பாண்டி தூக்கத்தில் இருந்து விழித்து தாயைக் காண பஞ்சாலைக்குள் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த இயந்திரத்தில் கை சிக்கி உள்ளது. இதில், குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பஞ்சாலைநிர்வாகத்திற்கு நெருக்கமான மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் உடன் வேலை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


பஞ்சாலை நிர்வாகத்தினரோ இச்செய்தி வெளியே கசிந்தால் தங்களது பஞ்சாலைக்கு ஏதாவது இடையூறு ஏற்படும் என கருதி மருத்துவர் வரும் வரை காத்திருக்க வைத்துள்ளனர். சிகிச்சைதாமதமான நிலையில், குழந்தையின் நசிங்கிய இடது கையில் 4 விரல்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மருத்துவ சிகிச்சைக்காக 10 ஆயிரம் ரூபாயைபெற்றோருக்கு முன்பணமாககொடுத்த மில் நிர்வாகம், பஞ்சாலையில் பணியாற்றியவர்களுக்குத்தான் மருத்துவ உதவி செய்ய முடியும், குழந்தைக்கெல்லாம் செய்ய முடியாது என கைவிரித்துள்ளனர். இயலாமையில் தவித்த பெற்றோர்கள் தங்களிடம் இருந்த சொற்ப நகைகளை விற்றுகுழந்தைக்கு வைத்தியம் பார்த்துள்ளனர். மேலும், நான்கு விரல்கள் துண்டான நிலையில் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கும் என அஞ்சி உரிய மேல் சிகிச்சை அளிக்க மருத்துவ உதவி வேண்டிமாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், பஞ்சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் இயந்திரங்கள் உள்ளதன் காரணமாகவே குழந்தையின் கை சிக்கி விரல் துண்டாகியுள்ளது. உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்என்று தொடர்ந்து பஞ்சாலை நிர்வாகத்திடம் கெஞ்சிப்பார்த்தோம். ஆனால் அவர்கள் எதுவும் பிடிகொடுத்து பேசவில்லை. ஆகவே மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்துள்ளோம். கூலித்தொழிலாளிகளான நாங்கள் கையில் உள்ள பொருட்களை அடகு வைத்து, குழந்தைக்கு தற்போது வரை சிகிச்சை அளித்துவருகிறோம். மேலும், சிகிச்சையளிக்க உதவிகள் கிடைத்தால் தங்கள் மகனுக்கு செயற்கை கை பொறுத்த முடியும் என கண்ணீர் மல்க கூறினர்.