திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இதையொட்டி கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கான கூட்டணி கட்சிகளின் ஊழியர்கள் பங்கேற்ற செயல்வீரர் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து புதன்கிழமை முதல் தனது வாக்கு சேகரிப்புபயணத்தை பி.ஆர்.நடராஜன் துவங்கினார். இவரின் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. வாக்கு சேகரிப்பின்போது பல இடங்களில் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களே, தங்களின் பல்வேறு போராட்டங்களுக்கு உடன் நின்ற பி.ஆர்.நடராஜனுக்கு ஆராத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு ஆதரவை நல்வி வருகின்றனர். இந்நிலையில் பி.ஆர்.நடராஜனின் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம், அவர் அரசியல் ஞானத்தோடும், நியாயத்தோடும்எழுப்பும் கேள்விகள் வாக்காளர்களை பெரிதளவு கவர்ந்து வரும் நிலையில், மறுபுறம் அவர் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பிரச்சார வாகனமானது வாக்காளர்கள், கூட்டணி கட்சியினர் என அனைத்து தரப்பினரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து வருகிறது. இவரின் தேர்தல் பிரச்சார வாகனமானது சிறியரக விமானம்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, பிரதமர் மோடி தனது ஆட்சி காலத்தில் அதிக நாட்கள் விமானம் மூலம் வெளிநாடுகளில் சுற்றி வந்ததையும், ரபேல் ஊழலை ஞாபகப்படுத்தும் வகையிலும் பிரச்சார வாகனத்தை விமானம் போல் தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது. பி.ஆர்.நடராஜன் பேச்சு மட்டுமல்ல, அவரின் பிரச்சார வாகனமும் அரசியல் பேசுவதாக வாக்காளர்கள் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது.