கோவை, ஏப்.8-
கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தொழில் வளத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அயராது பாடுபடுவேன் என மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பிஆர் நடராஜன் வாக்குறுதியளித்தார்மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர். நடராஜன் போட்டியிடுகிறார். இவர் திங்களன்று சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காலைசாரமேடு பகுதியில் தனது பிரச்சாரத்தை துவங்கிய அவர் பாரதிநகர், உடையாம்பாளையம், சவுரியபாளையம், மசக்காளிபாளையம், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில். பாஜக மற்றும் அதிமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவை மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. பாரதிய ஜனதா அரசினுடைய தவறான கொள்கைகளால் கோவையில் சிறு, குறு தொழில் மற்றும் விசைத்தறி ஆகியவை முழுமையாக அழியும் சூழல் உருவாகியுள்ளது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி காரணமாக தொழில் முனைவோர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் சிறு, குறு தொழில்களுக்கு முழுமையாக வரிவிலக்கு பெற்றுத்தர பாடுபடுவதோடு, கோவையின் தொழில் வளத்தை பாதுகாக்க அயராது உழைப்பேன் என வாக்குறுதி அளித்தார்.
மேலும் அவர் பேசுகையில், அதிமுக அரசு கோவை மக்களை குடிநீருக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளிவிட்டது. கோவை சிறுவாணி நீரை வெளிநாட்டு கம்பெனிக்கு விற்று விட்டது. இனி இந்த மக்கள் காசு கொடுத்துத்தான் குடிநீரை வாங்க வேண்டிய அவல நிலைக்கு இந்த அரசுதள்ளி விட்டது. எனவே, இந்த இரண்டு அரசுகளையும் அகற்றவேண்டும் என்றால் வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரான எனக்கு சுத்தியல், அரிவாள் நட்சத்திர சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக, இப்பிரச்சார பயணத்தில் திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமி, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஜி நாராயணசாமி, கிழக்கு மண்டல செயலாளர் மூ.வா. கல்யாணசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சி. பத்மநாபன், கே மனோகரன், எஸ். கருப்பையா, வி, தெய்வேந்திரன், பாண்டியன், நாகேந்திரன், ரவீந்திரன் மற்றும் காங்கிரஸ், மதிமுக விடுதலை சிறுத்தைகள், கொமதேக, உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.