கோவை:
லாட்டரி அதிபர் மார்ட்டின் காசாளர் உயிரிழந்த சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான கோவை ஹோமியோபதி அலுவலகத்தில் காசாளராக ணிபுரிந்து வந்தவர் பழனிச்சாமி. இவர் வெள்ளியன்று மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வெள்ளியங்காடு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மார்ட்டினுக்கு சொந்தமான அனைத்து அலுவலகங்கள், வீடுகளில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வந்தது. அப்போது பழனிச்சாமியின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அச்சமயம் வருமான வரித் துறையினர் பழனிச்சாமியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் வெள்ளியன்று பழனிச்சாமி சடலமாக மீட்கப்பட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பழனிச்சாமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அவருக்குப் பல தரப்புகளிலிருந்தும் நெருக்கடி வந்ததாகவும் அவரது மகன் ரோகின் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். முன்னதாக காசாளர் பழனிச்சாமி உயிரிழந்த வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சனியன்று பழனிச்சாமியின் உடலைக் கோவைக்குக் கொண்டு சென்று பிரேதப் பரிசோதனை செய்ய காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் கொலை வழக்காகப் பதிவு செய்த பின்னர் தான், பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவத்தை கைப்பேசியில் பதிவு செய்து கொண்டிருந்த கியூ பிரிவு காவல்துறை அதிகாரி ஒருவரின் கைப்பேசி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குப் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.