அவிநாசி, மே 22 - அவிநாசி அருகே கருகன்காடுபுதூர் பகுதியில் முறை கேடாக அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் இணைப்பை அவ்வீட்டில் வசித்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர் தானே முன்வந்து துண்டித்தார். அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் ஒரு சிலர் முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் கருகன்காட்டுப்புதூர் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்புகள் குறித்து ஆய்வு செய்தது. இதில் ராதா கிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு முறைகேடாக குடிநீர் குழாய் இணைப்பு பெற்றது தெரியவந்தது. இவரது இல்லத் தில்தான் தற்போது ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள கே.சி.வரதராஜன் வசித்து வருகிறார். இதையறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் கே.சி. வரதராஜன் தானாக முன் வந்து தான் வசிக்கும் வீட்டின் தண்ணீர் குழாய் இணைப்பை துண்டித்தார்.