தாராபுரம், ஏப். 6 -தாராபுரத்தில் தேர்தல் பிரச்சார வாகனத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், அரசியல் கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.தாராபுரம் துணை ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் பிரச்சாரத்திற்கு வாகன அனுமதி பெற அரசியல் கட்சியினர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். இதில் பிரச்சார வாகன பதிவு சான்று, காப்பீடு உள்பட பல்வேறு ஆவணங்களை இணைத்து, எந்த பகுதி மற்றும் தேதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம் என்ற விபரங்களை அளித்து அனுமதிக்கு விண்ணப்பிக்கின்றனர். துணை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தாராபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இந்த அனுமதி கோரும் விண்ணப்பம் ஆன்லைன் மூலம் அனுப்பப்படும். அங்கிருந்து சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு ஆன்லைனில் அனுப்பப்பட்டு, பிறகு அனுமதி வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு, 1 ஆம் தேதி பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்ட அரசியல் கட்சிக்கு காவல்துறையினர் பரிசீலனைக்கு பிறகு 4 ஆம் தேதியன்று 1ஆம் தேதிக்கு முதல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படுவதாக உத்தரவு வழங்குகின்றனர். இதனால் பிரச்சாரம் செய்யாமலேயே 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை வேட்பாளரின் பிரச்சார வாகனத்திற்கான செலவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே விண்ணப்பித்து நாளிலே அனுமதி வழங்கப்படவேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.