கோவை, ஜூன் 4-தமிழக தலைமை தேர்தல் ஆணையர்பழனிசாமி செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டார். தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. ஆளும் கட்சியான அதிமுக உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தாங்கள் தோல்வியுறுவோம் என்கிற அச்சத்தினாலேயே இத்தேர்தலை நடத்தவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. இதன் காரணமாகஉள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு அடிப்படை பணிகள்கூட நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையில் நீதிமன்றத்தின் தொடர் அழுத்தம் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு மாநில அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக வார்டு மறுவரை, வாக்குச் சாவடி பட்டியலை வெளியிடப்பட்டது. திங்களன்று இட ஓதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 37 பேரூராட்சி,12 ஊராட்சி ஒன்றியங்கள், 227 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றிற்கான தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் ஜடாவத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.