இப்போதெல்லாம்
குட்டிப்பையன் என்றால்
அது நான் அல்ல
இது பேரனுக்கு பிடிக்கும்
அது பேத்திக்கு பிடிக்கும்
மகனுக்கு பிடித்தது பற்றி
யாவரும் மறந்து போனார்கள்
தீபாவளிக்கே மூன்று புத்தாடை
வாங்கித் தந்தவர்கள் தான்
இயல்பாக சொல்கிறார்கள்
இன்னும் என்ன புது டிரஸ்
அது அவனுக்கு பிடிக்காது
அதை அவன் விரும்ப மாட்டான்
அதை அவன் சாப்பிட மாட்டான்
அவர்களாகவே வரையும்
சிறுகுறிப்புக்கு
வயிறுமில்லை வாயுமில்லை
பையனைப் பார்த்து கூட்டிட்டு
வாங்க என்பதில்
ஒரு காலத்தில் பார்த்து வாங்க
இருந்தது
அப்போதெல்லாம் உள்ளே
ஒரு சிறுவன் சிரித்திருந்தான்
கவனமற்ற அஃறிணையாக
நிலைக் கண்ணாடியில் சிரித்துப்
பார்க்கும் சத்திய சோதனைக்கு
எல்லா நாளும்
வீட்டு தலைவன் முகமூடி தான்
வீட்டிலுள்ளோர் கவனத்துள் இருக்க
சிறுபிள்ளையாகவே
இருக்க வேண்டி இருக்கிறது